வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:47 (07/07/2018)

பவனமங்கலம்  மணல் குவாரிக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

பவனமங்கலம் மணல் குவாரிக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தஞ்சாவூர் மாவட்டம் பவனமங்கலத்தைச் சேர்ந்த பொன்னுராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,  ``தஞ்சாவூர் மாவட்டம் பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. மணல் குவாரியில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்தன. ஆற்றுப்பாசனம் இல்லாத எங்கள் இடத்தில் மணல் குவாரி அமைத்தால் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கும். இந்த மணல் குவாரிக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து வட்டாட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்று குவாரியில் மறு ஆய்வு செய்ய இருப்பதாகத் தகவல் தெரிவித்தார். அதுவரை பணிகள் நிறுத்தப்படும் என உறுதி அளித்தார். 

ஆனால், தற்போது காவல்துறை பாதுகாப்புடன் குவாரி பணிகள் பொதுப்பணித்துறையால் தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் மணல் குவாரி துவங்குவதால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் கேள்விக் குறியாகிவிடும். தூத்துக்குடி போன்று எதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிடும் என கிராமமக்கள் பயப்படுகின்றனர். எனவே, வட்டாட்சியர் மணல் குவாரி அமைப்பதை மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், பவனமங்கலம் கிராமத்தில் காவரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.