வெளியிடப்பட்ட நேரம்: 03:36 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:45 (07/07/2018)

`வெளியே செல்லக்கூடாது, செல்போன் பயன்படுத்தக்கூடாது' - அறநிலையத்துறை முன்னாள் ஆணையருக்கு நீதிபதி உத்தரவு!

பழனி முருகன் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை முறைகேடு தொடர்பாகச்  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் தேடப்பட்டு வந்த இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர்  தனபால்  கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரானார். உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் கூறியுள்ளபடி  தனபால் கும்பகோணம் நகரை விட்டு 60 தினங்களுக்கு வெளியே செல்லக்கூடாது, செல்போன் பயன்படுத்தக் கூடாது, அவர் தங்கியிருக்கும் இடத்தில் 24 மணி நேரமும் போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

தனபால்  

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிதாக செய்யப்பட்ட முருகன் உற்சவர் சிலையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறிப் பல புகார்கள் வந்தன. இதனையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில்  கோயிலின் முன்னாள்  இணை ஆணையர் கே.கே.ராஜா, சிலையை வடிவமைத்த முத்தையா ஸ்தபதி ஆகிய இருவரையும் முதலில் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி பழநி கோயிலின் முன்னாள் உதவி ஆணையரும், பழநி பழைய ஆயக்குடி கிழக்குச் தெருவைச் சேர்ந்த  புகழேந்தி  மற்றும் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த தங்க நகைகள் சரிபார்ப்பு முன்னாள் அலுவலர்  தேவேந்திரன் என்பரையும்  போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பின்னர்  ஜாமீனில் வெளியே வந்தனர். இதற்கிடையில் இந்த வழக்கின்  மூன்றாவது குற்றவாளியான இந்து சமய அறநிலையைத் துறையின் முன்னாள் ஆணையர் தனபாலை போலீஸார் தேடி வந்தனர். ஆனால், அவர் தலைமறைவாகி இருந்ததோடு மேலும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இரு முறை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் தனபாலை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரைக் கண்டுபிடித்து தருவோருக்கு ரூ. 20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த மாதம் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 21.6.2018 அன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தனபால் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அப்போது  நீதிபதி இவ்வழக்கு நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில் 15 தினங்களுக்குள் ஆஜராக வேண்டும். இருவரை ஜாமீன்தாரராக காட்ட வேண்டும் என உத்தரவிட்டார். இதன் பிறகு அந்த உத்தரவு  நகல் கடந்த 25-ம் தேதி தனபாலுக்கு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, தனபால் கும்பகோணம் நீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆஜராகலாம் எனச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று  காலை கும்பகோணம் குற்றவியல்  நீதிமன்றத்தில்  தனபால் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மதியம் விசாரிப்பதாகவும் அதுவரை நீதிமன்றத்திலேயே  அமரும்படி நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் மதியம் 2 மணிக்கு நீதிபதி முன், தனபாலுக்கு ஜாமீன்தாரராக அவரின் உறவினர்கள் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கனகரத்தினம், யோகானந்தம் ஆகிய இருவரும் ரூ.1 லட்சம் பிணையத் தொகையும், சொத்துப் பத்திரங்கள் மற்றும் தனபாலின் பாஸ்போர்ட் ஆகியவற்றோடு அவர் எங்கு தங்குகிறார் என்ற விவரங்களையும்  தாக்கல் செய்தனர்.

இதனையேற்றுக்கொண்ட நீதிபதி,  ``உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் கூறியுள்ளவாறு தனபால் கும்பகோணம் நகரை விட்டு 60 தினங்களுக்கு வெளியே செல்லக்கூடாது, அவர் செல்போனை பயன்படுத்தக்கூடாது, தேவைப்பட்டால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் முன் அனுமதியோடு, அவர்களுடைய செல்போனை பயன்படுத்திக் கொள்ளலாம், இணையதளம் பயன்படுத்தக்கூடாது போன்ற நிபந்தனைகளோடு அவர் தங்கியுள்ள இடத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்" என்றார். பின்னர் தனபால் போலீஸார் பாதுகாப்போடு கும்பகோணம் மடத்துத்தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று தங்கியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க