`தூத்துக்குடி சம்பவத்துக்கு வைகோ போன்றவர்கள்தான் காரணம்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ பகீர்!

``தூத்துக்குடியில் மக்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட இருந்த நிலையில், வைகோ போன்ற தலைவர்கள் எல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேவையற்ற பீதியை மக்களிடையே கிளப்பியதால், இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது" என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். 

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ,  ``ஸ்டெர்லைட் ஆலைக்கும், தமிழக அரசுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர், வைகோ பேசுவதை வேடிக்கையாக எடுத்துக்கொள்வதா, கேலிக்கூத்தாக எடுத்துக் கொள்வதா, ஏளனமான எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடிட அரசு, அரசாணை வெளியிட்டபோது, அது செல்லாது என்று அவர் கூறினார்.

அரசாணையில் செல்லும் அரசாணை, செல்லாத அரசாணை எதுவும் இல்லை என்று கூறினேன். அரசாணை தெளிவாக வெளியிட்டதன் காரணமாகத்தான் நேற்று மத்திய அரசு கட்டுப்பாட்டியில் உள்ள  பசுமைத் தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்த போதும், தமிழக அரசு எடுத்த முடிவு செல்லுபடியாகும். தமிழக அரசின் அரசாணையில் தலையிட முடியாது. ஸ்டெர்லைட் ஆலைத் திறக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. 

இதை வைகோ பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை. அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக அவர்  பேசி வருகிறார். இந்த ஆலைக்கு எதிரானப் போராட்டம் தொடங்கியபோது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு உரிமத்தை புதுப்பிக்கத்தான் ஆலை மூடப்பட்டது. கடந்த மே 22-ம் தேதி  சம்பவத்துக்கு 23 நாள்களுக்கு முன்பாக ஏப்ரல் 9-ம் தேதியே  ஆலை மூடப்பட்டது. 

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. மக்கள், தங்கள் போராட்டத்தைக் கைவிட இருந்த நிலையில், வைகோ போன்ற தலைவர்கள் எல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தவறான தகவலைக் கொண்டு சேர்த்ததுடன், தேவையற்ற பீதியை மக்களிடையே கிளப்பி இப்படி ஒரு  சம்பவத்துக்கும், இப்படி ஒரு நிலைக்கும் இழுத்துச் சென்றுவிட்டனர். மனு கொடுக்கச் சென்ற எங்களைத் தவறான வழிக்கு சிலர் இழுத்துச் சென்றுவிட்டதாக மீனவர்களும், கிராம மக்களுமே தெரிவித்துள்ளனர். பொறுப்புள்ள தலைவர்கள் இதுபோன்ற தவறான தகவலை சொல்லமாட்டார்கள், வைகோ பொறுப்பான தலைவராக நடந்துகொள்ள வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!