வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (07/07/2018)

கடைசி தொடர்பு:14:13 (07/07/2018)

யானைகள் அனுபவிக்கும் கொடூர சித்ரவதை ’பன்றிக்காய்’! - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 17

யானை அழுதிருப்பதை அதன் முகத்திலிருக்கும் கண்ணீர் தடங்கள் காட்டிக் கொடுக்கிறது. யானைக்கு வேறு எங்கும் காயங்கள் இருக்கிறதா எனக் கால்நடை மருத்துவர்  சோதனை செய்கிறார்.

யானைகள் அனுபவிக்கும் கொடூர சித்ரவதை ’பன்றிக்காய்’! - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 17

யானை பன்றிக்காய்

 

``பன்றிக்காய் குறித்த எந்த விபரீதமும் அறியாத யானை பன்றிக்காயை கடித்ததும் தாடை, வாய், நாக்கு என ஒட்டுமொத்த அஸ்திவாரமே சிதைந்து போய் விடுகிறது. காயம் ஆறினால் மட்டுமே மேற்கொண்டு தண்ணீரோ, உணவோ எடுத்துக் கொள்ள முடியும். அடுத்த நிமிடம் குறித்த நம்பிக்கை குறைய ஆரம்பிக்கும்பொழுது யானை அடுத்த அடியை எடுத்து வைக்க யோசிக்கும்.  வலியின் வீரியத்தால் ரத்தம் சொட்டச் சொட்ட யானை வனத்துக்குள் திரிய ஆரம்பிக்கும்.  காயம்பட்ட முதல் நாள் எப்படியோ சமாளித்துவிடுகிற யானை இரண்டாவது நாளிலிருந்துதான் பிழைத்திருப்பதற்கான போராட்டத்தைத் தொடங்குகிறது"


நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே, கடந்த மே மாத கடைசியில் ஒரு வயது குட்டியோடு ஒரு யானை சுற்றி திரிந்தது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என மூன்று மாநிலங்களின் எல்லைகள் கூடலூரைச் சுற்றி அமைந்திருப்பதால் யானை எங்கிருந்து வந்திருக்கும் என்ற தகவல்கள் இல்லை. அதே வாரம் சேரம்பாடி பகுதியில் நம்பர் 2 என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் யானை தாக்கி இறந்திருக்கிறார். மூதாட்டியைக் கொன்றது இந்த யானைதான் என பேச்சுவாக்கில் மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். காடுகளில் சுற்றித் திரிந்த யானை அதே பகுதியில் இருந்த பலா மரத் தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த பலாப் பழங்களைப் பல நாள்களாகச் சாப்பிட்டு விட்டுச் செல்வதை பழக்கமாக வைத்திருக்கிறது. குட்டியோடு இருப்பதால் இந்த யானையை மக்கள் எளிதாக அடையாளம் கண்டுகொண்டனர். யானைகள் பலாப்பழங்களை மரத்திலிருந்து பிடுங்கி எடுத்து உண்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? யானைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் பலாப்பழத்தை ஓரிரு நிமிடங்கள் பார்க்கிற யானை அதைப் பறிப்பதற்கு தன்னுடைய முன் இரு கால்களையும் தூக்கி மரத்தில் வைத்து பின்னர் தும்பிக்கை உதவியுடன் பிடுங்கி எடுக்கும். பின்னர் காலில் போட்டோ அல்லது தும்பிக்கையால் பிளந்தோ சாப்பிட்டுவிட்டுப் போகும். அதனுடைய கழிவுகளில் கிளறிப் பார்த்தால் பலாப் பழத்தின் கொட்டைகள் எந்தச் சேதாரமுமின்றி இருக்கும். பல முறை பார்த்திருக்கிறேன்.  

பன்றிக்காய் கடித்த யானை

முந்தைய அத்தியாயம்

பலாப்பழ மரங்கள் இருக்கும் பகுதியில் சுற்றித் திரிகிற யானை சில நாள்களுக்கு அதைச் சுற்றியே திரியும். அப்படித்தான் குட்டி யானையுடன் தாய் யானை சுற்றித் திரிந்தது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் குட்டியோடு அங்கிருந்த பலா மரத் தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கிருந்த பலாப்பழங்களைச் சாப்பிட்டிருக்கிறது. பலாப்பழங்களை யானை சாப்பிடுவதைத் தவிர்க்க யாரோ பலாப்பழத்துக்குள் பன்றிக்காயை வைத்திருக்கிறார்கள். பழத்துக்குள் மறைத்து வைத்திருப்பதால் யானையால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பலா வாசனையில் வேறு எந்த வாசனையையும் யானையால் உணர முடியாமல் போகிறது. சில நிமிடங்களில் பன்றிக்காய் வாயில் இருக்கும் பொழுதே வெடித்து விடுகிறது. குட்டி யானைக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது என்பதால் குட்டி யானையும் தாய் யானையைப் பின் தொடர்ந்தே சென்றிருக்கிறது. முதல் நாள் எப்படியோ சமாளித்துக் கொண்ட யானை அடுத்தடுத்த நாள்களைச் சமாளிக்க முடியாமல் திணற ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் இனி பிழைக்க முடியாது என உணர்ந்த யானை குட்டியானையை எங்கோ பாதுகாப்பாய் விட்டுவிட்டுத் தனியாக பிரிந்து வருகிறது.

மூன்று நாள்களுக்கும் மேலாக உணவில்லாமல், தண்ணீர் அருந்த முடியாமல் திரிந்த யானை பந்தலுாரை அடுத்த படச்சேரி பகுதியில் இருக்கிற குடியிருப்புப் பகுதிக்குள் வருகிறது. உடல்மெலிந்து, யானை என்கிற அடையாளத்தைத் தொலைத்து பாதி உயிரை எப்படியோ கையில் பிடித்துக்கொண்டு நடந்து வந்த யானை ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் ஒரு சுவரில் மோதி கீழே விழுகிறது. யானை விழுந்தவுடன்தான் யானைக்குக் காயம் இருப்பதே மக்களுக்குத் தெரிய வருகிறது. உடனே வனத்துறைக்குத் தகவல் கொடுக்கிறார்கள். முதுமலையில் வனக் கால்நடை மருத்துவர்கள் யாருமே இப்போது பணியில் இல்லை. அதனால் வனத்துறை அதிகாரிகள் கூடலூரில் இருந்த கால்நடை மருத்துவரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு வருகிறார்கள். கால்நடை மருத்துவருக்கும், வனக் கால்நடை மருத்துவருக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. கால்நடை மருத்துவர் ஆடு, மாடு, நாய் என வளர்ப்புப் பிராணிகளுக்கு சிகிச்சையளிப்பதில் அனுபவம் கொண்டவர். ஆனால், வனக் கால்நடை மருத்துவர் என்பவர் வன விலங்குகள் மட்டுமல்லாது எல்லா விலங்குகளுக்கும் சிகிச்சையளிப்பதில் அனுபவம் கொண்டவர். யானைகளுக்கு மருத்துவம் பார்க்கும் அளவுக்கு முதுமலையில் இப்போது அனுபவம் உள்ள வனக் கால்நடை மருத்துவர்கள் யாரும் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமே பல மாதங்களாக வனக் கால்நடை  மருத்துவர் இல்லாமல்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

யானையின் தாடை, வாய், நாக்கு என எல்லாமே சிதைந்திருப்பதைப் பார்க்கிற கால்நடை மருத்துவர், யானைக்கு முதலுதவியைச் செய்ய ஆரம்பிக்கிறார். யானைக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. யானை எழுந்திருக்கவே முடியாமல் உயிருக்குப் போராடுகிறது. யானை அழுதிருப்பதை அதன் முகத்திலிருக்கும் கண்ணீர் தடங்கள் காட்டிக் கொடுக்கிறது. யானைக்கு வேறு எங்கும் காயங்கள் இருக்கிறதா எனக் கால்நடை மருத்துவர் சோதனை செய்கிறார். இதற்கு முன்பு இப்படியான காயங்களுடன் யானையைப் பார்த்ததில்லை என்பதால், எப்படி காயம் ஏற்பட்டது எனக் குழம்பி போகிறார். யானையின் உடலில் தும்பிக்கையைத் தவிர வேறு எந்த இடத்திலும் அசைவே இன்றி கிடந்தது. அடிபட்டுக் காயத்தோடு கிடப்பது குட்டியோடு இருந்த யானை என்பதை இதற்கு முன்பு யானையைப் பார்த்த எல்லோருமே வனத்துறையிடம் தெரிவிக்கிறார்கள். குட்டி யானை எங்கே போனது என்ன ஆனது என்கிற விஷயம் யாருக்கும் தெரியாமல் போகிறது. ஊரில் இருப்பவர்கள் “இறந்து போவதை முன் கூட்டியே அறிந்த தாய் யானை, குட்டி யானையைப் பாதுகாப்பாக வேறொரு யானைக்  கூட்டத்தில் சேர்த்துவிட்டு தனியாக வந்திருக்கிறது" எனப் பேச ஆரம்பிக்கிறார்கள். 

பன்றிக்காய் இறந்து போன யானை

முந்தைய அத்தியாயம் 

யானை விழுந்துக் கிடப்பதைப் பார்க்க மக்கள் கூடிவிட்டதால் யானையை அங்கிருந்து மக்கள் நடமாட்டமில்லாத எலியாஸ் கடை என்னும் இடத்துக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிப்பது  எனக் கால்நடை மருத்துவர் முடிவு செய்கிறார்.  ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு யானையைத் தூக்க முயற்சி செய்கிறார்கள். யானையின் உடல் முழுவதும் பெல்ட்டால் கட்டி அதைத் தூக்கி நிறுத்தினார்கள். மூன்று நாள்களுக்கும் மேலாகக் காயத்துடன் சரியான உணவில்லாமல் இருந்த யானையால் நிற்க முடியாமல் தடுமாறுகிறது. உடல் முழுக்க பட்டைகளால் கட்டித் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த யானையைப் பார்க்கிறவர்கள் அந்தக் காட்சியை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.  அதன் கடைசி நிமிடங்களைப் பார்க்கிறவர்கள் அந்நிலையை எண்ணி கண்ணீர் சிந்துகிறார்கள்.  பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு  ஜே.சி.பி உதவியுடன்  யானையை லாரியில் ஏற்றுகிறார்கள். யானை பொதுவாக பிழைத்துக்கொள்வோம் என நினைத்தால் அதற்கு மனிதர்களின் உதவி இருந்தால் போதும் அதுவாகவே எழுந்துகொள்ளும். இனி பிழைக்கமாட்டோம் என நினைத்து விழுகிற யானையை எவ்வளவு முயன்றாலும் நிற்க வைத்துவிட முடியாது. லாரியில் ஏற்றி எலியாஸ் கடையை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே யானை இறந்துவிடுகிறது. லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட யானைக்கு அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள். எல்லாம் முடிந்து இறந்த தாய் யானையை அங்கேயே புதைத்துவிட்டு செல்கிறார்கள். யானை இறப்புக்கான காரணத்தை பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே கூற முடியும் எனக் கூறிவிட்டு எல்லோரும் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். 

யானை ஒரு பேருயிர். எந்தச் சூழ்நிலையையும் சமாளித்துவிடும் உயிரினம். ஆனால், சில ஆண்டுகளாகவே யானைகளுக்கும் மனித இனத்துக்குமான ஒரு போராட்டம் தொடங்கிவிட்டது. யானைகளுக்காகப் போராடிய  இனம் இப்போது யானைகளோடு போராடிக் கொண்டிருக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைவிட யார் அழிந்து போவார்கள் என்பதே இப்போதைக்குக் கேள்வியாய் நிற்கிறது. மனிதன் மற்ற உயிரினங்களைக் கொல்வதற்கு அவற்றின் பசியையே இப்போது வரை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.  எலியின் பசிக்கு எலிப்பொறி, பன்றிக்குச் சுருக்கு, மீனுக்குத் தூண்டில் என ஆசையைத் தூண்டி, உயிர்களைக் கொல்வதெல்லாம் மனிதனுக்கு கை வந்தக் கலை.  அதிலும் பன்றிக்காய் பயன்படுத்தி பசியோடு இருக்கிற யானையை அணு அணுவாகக் கொல்வதெல்லாம் இப்போதுதான் பழக்கத்துக்கு வந்திருக்கிறது. 

கூடலூர் தாய் யானையின் இறப்பு, அதோடு  நின்றுவிடவில்லை,  தாய் யானை இறந்த அடுத்த நாள் அதே பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுக்கிறார்கள்…..

தொடரும்…..


 


டிரெண்டிங் @ விகடன்