வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:20 (07/07/2018)

``எதிரிக் கட்சியாகப் பார்க்காதீர்கள், எதிர்க் கட்சியாகப் பாருங்கள்” - வெங்கையா நாயுடு பேச்சு

``எதிரிக் கட்சியாகப் பார்க்காதீர்கள், எதிர்க் கட்சியாகப் பாருங்கள்” என்று துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடு

புதுச்சேரி அரசின் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா, நீச்சல் குளம் மற்றும் SAI மகளிர் விடுதி அடிக்கல் நாட்டு விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, ``மத்திய அரசிடமிருந்து புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, துணை ஜனாதிபதி அவர்கள் மத்திய அரசிடம் பேசி புதுச்சேரிக்கு கூடுதலாக நிதி கிடைக்க ஏற்பாடு செய்துதர வேண்டும். அதேபோன்று 15-வது நிதிக் கமிஷனில் புதுச்சேரியைச் சேர்க்க உதவி செய்ய வேண்டும். மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.

நாராயணசாமி

அவரைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, ``இன்றைய காலகட்டத்தில் சின்ன நாடுகள் கூட விளையாட்டுகளில் பல பதக்கங்களை வெல்கின்றன. அதனால் நம் நாட்டில் விளையாட்டின் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். வளமான இந்தியாவுக்கு விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தேர்தலின்போது பல கட்சிகளாக இருந்து போட்டியிட்டாலும், தேர்தலுக்கு பின் நாம் அனைவரும் மக்களுக்காகத்தான் பாடுபட வேண்டும். எதிர்க்கட்சியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர எதிரிக் கட்சியாக பார்க்கக் கூடாது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க