தேனியில் ’பார்மலின் மீன்கள்’ விற்பனையா? பரபரக்கும் அதிகாரிகள்!

தேனியில் ’பார்மலின் மீன்கள்’ விற்பனையா? மக்கள் அச்சம்!

தேனியில் ’பார்மலின் மீன்கள்’ விற்பனையா?  பரபரக்கும் அதிகாரிகள்!

மிழக - கேரள எல்லை அருகே உள்ள ஆரியங்காவு சோதனைச்சாவடியில், கடந்த மாதம் இறுதியில் கேரள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தமிழகம் மற்றும் ஆந்திராவிலிருந்து மீன்கள் ஏற்றிவந்த இரண்டு லாரிகளைச் சோதனை செய்தனர். அதில் 7,000 கிலோ இறால் மற்றும் 2,600 கிலோ மீன்களில் பார்மலின் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதைக் கண்டறிந்தனர். இந்தப் பார்மலின் வேதிப்பொருளானது பிணங்கள் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் நச்சு மிகுந்த வேதிப்பொருள். இதை மீன்கள் கெடாமல் இருக்கப் பயன்படுத்தியதும், ஒரு கிலோ மீனில் 63 மில்லி கிராம் என்ற அளவில் பார்மலின் கலந்திருப்பதும் கேரள அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது. மேலும், மீன் பெட்டிகளில் போடப்படும் ஐஸ்கட்டிகள் உருகாமல் இருக்க அமோனியா பயன்படுத்தப்பட்டதும் கேரள அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் சாகர் ராணி’ என்று பெயரிடப்பட்ட ஆபரேஷன் மூலம், 21,000 கிலோ பார்மலின் கலந்த மீன்களைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதனால் தமிழகக் கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களைக் கேரள வியாபாரிகள் வாங்க மறுக்கும் நிலை ஏற்பட்டது மட்டுமல்லாமல், இதன் விளைவாகப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீன்களின் விலையும் குறைந்தது. 

மீன்கள், ஆய்வு

தேனியில் பார்மலின் மீன்களா... அதிகாரிகள் ஆய்வு!

மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குச் சென்ற சில நாள்களிலேயே பார்மலின் மீன்கள் குறித்த தகவல்கள் பரவியது, மீனவர்களைக் கவலையடையச் செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் மீன்களைக் கேரள வியாபாரிகள் திருப்பி அனுப்பும் நிலை தொடர்கிறது. இந்நிலையில், தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டமான தேனியில் பார்மலின் மீன்கள் விற்கப்படுதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் இறங்கினர். இதுதொடர்பாகத் தேனி மாவட்ட மீன்வளத் துறை ஆய்வாளர் இந்து சாராவிடம் பேசியபோது, ``இதுதொடர்பாகத் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறோம். பெரியகுளம், தேனி, போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தோம். பார்மலின் கலந்த மீன்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. இந்த ஆய்வில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் அந்தந்த நகராட்சி சுகாதார அலுவலர்கள் உடன் இருந்தனர்’’ என்றவரிடம், ``கேரளாவுக்கு ஏற்றிச் செல்லப்பட்ட மீன்கள் திருப்பி அனுப்பப்படும்போது எல்லையோர மாவட்டமான தேனியில் அவற்றை விற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளனவா'' என நாம் கேள்வி எழுப்பினோம். அதற்குப் பதிலளித்த அவர்,  ``அப்படி விற்பனை செய்ய வாய்ப்பில்லை. நாங்கள் தொடர் கண்காணிப்பில்தான் இருக்கிறோம்’’ என்றார்.

பார்மலின் கலந்த மீன்கள்

தேனியில் கடல் மீன்கள் விற்பனை குறைவு!

``பார்மலின் மீன்கள் தொடர்பான அதிகாரிகளின் திடீர் ஆய்வின் எதிரொலியாக மக்கள் அச்சப்பட வாய்ப்புள்ளதே'' என உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் சுகுணாவிடம் கேட்டோம். அதற்கு அவர், ``தேனியில் கடல் மீன்கள் விற்பனை, நன்னீர் மீன்களின் விற்பனையைவிடக் குறைவுதான். பார்மலின் அச்சம் கடல் மீன்களுக்கு மட்டும்தான் உள்ளது. மதுரை கரிமேடு மீன் சந்தையில் இருந்துதான் தேனிக்கு கடல் மீன்கள் வருகின்றன. எனவே, தற்போது நடைபெற்ற ஆய்வில் பார்மலின் கலப்பு இல்லை என உறுதி செய்திருக்கிறோம். இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை’’ என்றார், மிகவும் உறுதியாக.

பார்மலின் என்றால் என்ன?

பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருளில் இருந்து பார்மலின் பெறப்படுகிறது. இதை, தண்ணீரில் கலந்து மீன்களின்மீது தடவி விடுவர். இதனால் மீன்களைக் கெட்டுப்போகாமல் தடுக்கவும், பதப்படுத்தவும் முடியும். பிணவறைகளில் பிணங்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் பார்மலினில் 37 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை பார்மால்டிஹைடு இருக்கும். 37 சதவிகித பார்மால்டிஹைடு  மனிதர்களைக் கொல்லக்கூடிய அளவாகக் கருதப்படுகிறது. 

``பார்மலின் வேதிப்பொருள் மீன்கள் மட்டுமல்லாமல் நண்டு, இறால் ஆகியவற்றிலும் கலக்கப்படுவதாகவும், வியாபார நோக்கோடு சிலர் செய்யும் இக்காரியத்தால், சிறுநீரகக் கோளாறு, இதயம் பலவீனமாதல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, புற்றுநோய் அபாயம்கூட ஏற்படலாம்'' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

வியாபாரத்துக்காக இப்படியா செய்வது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!