செருப்புக்குள் செல்போன் சிம்கார்டு; கைதிக்கு கொடுக்க முயன்றபோது சிக்கிய நண்பர்கள்!

கோர்ட்டுக்கு வந்த கைதிக்கு, செருப்புக்குள் செல்போன் மற்றும் சிம் கார்டு வைத்து கொடுக்க முயன்ற நண்பர்களை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

செல்போன் கொண்டு வந்த நண்பர்கள்


புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் 400-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும், விசாரணைக் கைதிகளும் உள்ளனர். இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய  வாணரப்பேட்டை சூசைராஜ் என்பவர் வழக்கு விசாரணைக்காக காலாப்பட்டு சிறையிலிருந்து நேற்று  நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவரின்  நண்பர்கள்  சங்கர், அப்பு, அப்துல் அஜீஸ், திருமால் மற்றும் முகமது ஃபரித் ஆகியோர் தாங்கள் கொண்டு வந்த செருப்புக்குள்  செல்போன், சிம் கார்டு, சார்ஜர் ஆகியவற்றை மறைத்து வைத்துக் கொடுக்க முயன்றனர். கைதி சூசைராஜ் தனது செருப்பைக் கழற்றிவிட்டு நீதிமன்றத்துக்குள் செல்லும்போது இவர்கள் கொண்டு சென்ற செருப்பை மாற்ற முயன்றபோது பிடிபட்டனர். அவர்களை உருளையன்பேட்டை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் இருந்த செருப்பு, செல்போன் சிம்கார்டு, கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரியில் நடக்கும் பெரும்பாலான கொலை மற்றும் குற்றச் சம்பவங்களுக்குச் சிறையில் இருந்துதான் திட்டம் தீட்டப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இந்நிலையில், இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!