வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:14 (07/07/2018)

இனி ஆன்லைனில் மட்டுமே பிறப்பு, இறப்புச் சான்றிதழ்! தமிழக அரசு அறிவிப்பு

இனி ஆன்லைனில் மட்டுமே பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இறப்பு

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை கடந்த 2000-ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள்,  சி.ஆர்.எஸ் என்ற மென் பொருள்  மூலம் வழங்கி வருகிறது. இனி இந்த சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற முடியும் என்றும் மேனுவலாக வழங்கப்பட மாட்டாது என்றும் சுகாதாரத்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளுக்கு மாநிலம் முழுவதும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய மென் பொருளை சுட்டிக்காட்டி ‘ இந்த மென் பொருள் மூலம் வழங்கப்படும் ஆவணங்கள் சட்டபூர்வமாக செல்லும். அவற்றை அதிகாரபூர்வ சான்றுகளாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறிப்பிட்ட பதிவாளர்கள் மட்டுமே ஆன்லைன் மூலமாகச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் அதுவும் புதிய மென் பொருள் மூலமாக மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மற்றும் வருவாய்த் துறை, பஞ்சாயத்து இயக்குநர்கள் என அனைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மென் பொருளுடன் கர்ப்பிணிகளைக் கணக்கிடுவதற்கான வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.