`என்னை மன்னித்து விடுங்கள் பெற்றோர்களே'- தாய்லாந்து குகைக்குள் சிக்கிய பயிற்சியாளர் உருக்கமான கடிதம்

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து அணி வீரர்களின் பயிற்சியாளர், பெற்றோர்களுக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், `என்னை மன்னித்து விடுங்கள்' என எழுதியிருக்கிறார் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங்.

தாய்லாந்து குகை

தாய்லாந்தில், கடந்த ஜூன் 23-ம் தேதியன்று, உள்ளூர் பள்ளி ஒன்றின் இளம் கால்பந்து அணி வீரர்கள், அவர்களது பயிற்சியாளருடன் வடக்கு தாய்லாந்துப் பகுதியில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் தி தம் லுஅங் குகைக்குச் சென்றனர். அப்போது, பெய்த மழையால் குகைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், 13 பேரும் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து, அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 9 நாள் தேடுதலுக்குப் பின்னர் 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளர்களுடன் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகைக்குள் புகுந்த வெள்ள நீர் வடியாமல், சகதியாக உள்ளதால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து மீட்புப் பணியினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த 1000 மீட்புப் படையினர் கைகோத்துள்ளனர். இந்நிலையில், குகைக்குள் சென்று திரும்பிய முன்னாள் சீல் டைவர் வீரர் சமன் குனான் என்பவர் போதிய ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழந்தார். இந்த துயரச் செய்தி தாய்லாந்து மக்களை சோகம் அடையச் செய்தது. மேலும், சிறுவர்களின் பெற்றோர்களும் பதற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், கால்பந்து அணியின் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் (Ekkapol Chantawong) கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், `அன்பான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வணக்கம், அனைத்துக் குழந்தைகளும் நலமாக உள்ளனர். அனைத்துக் குழந்தைகளையும் பத்திரமாக பாதுகாத்துக்கொள்வேன் என சத்தியம் செய்து தருகிறேன். மீட்புக் குழுவினர் எங்களைப் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். உங்களின் தார்மீக ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி; என்னை மன்னித்து விடுங்கள் பெற்றோர்களே!' என்று உருக்கமாகக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தை மீட்புக்குழு வீரர் ஒருவரிடம் பயிற்சியாளர் கொடுத்து அனுப்பி உள்ளார். முன்னதாக, குகைக்குள் தொலைபேசி இணைப்பை வழங்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கடிதம் மூலம் தொடர்பு கொண்டிருப்பது பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!