`பூஜை அறையில் பள்ளம் தோண்டி சூன்யம்'- வீட்டுக்காகப் போராடும் நடிகை ஜெயசித்ரா 

நடிகை ஜெயசித்ரா

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை நடிகை ஜெயசித்ரா வாடகைக்கு கொடுத்துள்ளார். அந்த வீட்டை மீட்க பல ஆண்டுகளாக அவர் நீதிமன்றம் மூலம் போராடிவருவதாகத் தெரிவித்தார். 

சென்னை, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பாஸ்கர தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவுக்குச் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டில் கார் புரோக்கர் இளம்முருகன் என்பவர் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். இவருக்கும் நடிகை ஜெயசித்ராவுக்கும் வாடகைப் பணம் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால்,  வீட்டைக் காலி செய்யும்படி நடிகை ஜெயசித்ரா கூறியுள்ளார். ஆனால், இளம்முருகன் வீட்டைக் காலி செய்யவில்லை. இந்தப் பிரச்னை நீதிமன்றத்துக்குச் சென்றது. நீதிமன்றத்தில் நடிகை ஜெயசித்ராவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும். அதற்கு நீதிமன்றம் மூலம் தடை உத்தரவை இளமுருகன் பெற்று வந்துள்ளார். இதனால் அந்த வீட்டை மீட்க நடிகை ஜெயசித்ரா பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார். 

இதுகுறித்து நடிகை ஜெயசித்ராவிடம் பேசினோம். ``சென்னை யானைக்கவுனி போலீஸ் நிலையத்தில் சினிமா பைனான்சியர் அசோக்குமார் என்பவர் கொடுத்த புகாரில் கார் புரோக்கர் இளம்முருகன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசோக்குமார், தன்னுடைய புகாரில் என்னிடமும் இளம்முருகன் வீட்டை அபகரிக்க முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார். என்னுடைய வீட்டில் வாடகைக்கு குடிவந்த இளம்முருகன் ஏழரை லட்சம் ரூபாய் வரை வாடகைப்பணம் தராமல் இழுத்தடித்துவருகிறார். மேலும், வீட்டையும் அவர் காலிசெய்யவில்லை. இதற்காக சட்டரீதியாக பல ஆண்டுகளாகப் போராடிவருகிறேன். 

கடந்த சில ஆண்டுக்கு முன்பு வீட்டைக் காலி செய்ய இளம்முருகனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது வீட்டில் உள்ள பொருள்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டன. ஆனால், அதற்கு நீதிமன்றத்தில் அவர் தடை உத்தரவு பெற்றுவிட்டார். பொருள்களை வெளியேற்றியபோது  வீட்டின் பூஜை அறையில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பச்சை மிளகாய், வேப்பிலை, எலுமிச்சை ஆகியவை வீடு முழுவதும் சிதறிக் கிடந்தன. சூன்யம் வைத்து வீட்டை அபகரிக்கத்தான் பூஜை நடந்திருப்பதாகக் கருதுகிறேன். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த வீட்டுக்கு நான் செல்வதில்லை. சமீபத்தில் வீட்டை 60 நாளுக்குள் காலி செய்யும்படி இளம்முருகனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சில நாளுக்கு முன்பு அமீனா, வீட்டுக்குச் சென்றார். ஆனால், வீட்டில் யாரும் இல்லை. இதனால் நீதிமன்றம் காலக்கெடு கொடுத்துள்ளது. நீதிமன்றம் மூலம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார். 

சினிமா பைனான்சியர் சவுகார்பேட்டையைச் சேர்ந்த அசோக்குமார், கார் புரோக்கர் இளம்முருகன், அவரின் மனைவி மீனா மீது யானைக் கவுனி போலீஸ் நிலையத்தில் செக் மோசடி புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில்தான் நடிகை ஜெயசித்ரா வீட்டை இளம்முருகன் அபகரிக்க முயன்ற தகவலையும் குறிப்பிட்டுள்ளார்.

வாகன பைனான்ஸியர் நரேஷ் கோத்தாரி,  யானைக்கவுனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், `கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், பாஸ்கரா தெருவில் குடியிருக்கும் மீனா, அவரின் கணவர் இளம்முருகன் ஆகியோர் என்னைச் சந்தித்து காருக்கு பைனான்ஸ் வேண்டும் என்று கேட்டனர். அதன்படி 2 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டனர். அதுகுறித்து மீனாவிடம் கேட்டதற்கு என் மீது பாலியல் புகார் கொடுப்பதாக மிரட்டினார். என்னைப்போல அவர்கள் பலரை ஏமாற்றியுள்ளது தெரிகிறது. எனவே, இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!