வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:06 (07/07/2018)

`2021-ம் ஆண்டு வரை ஆட்சி உள்ளது' - ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து ஜெயக்குமார் பதில்

`2024-ம் ஆண்டில் மக்களவை, சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால் அ.தி.மு.க வரவேற்கும்' என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். 

ஜெயக்குமார்

சென்னை, கிண்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `2024-ம் ஆண்டில் மக்களவை, சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால் அ.தி.மு.க வரவேற்கும். ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவது நல்ல விஷயமாக இருந்தாலும், 2021-ம் ஆண்டு வரை ஆட்சி அதிகாரம் உள்ளதால், அதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டாம் என்று மத்திய அரசிடம் நேற்று கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளோம்' என்றார்.

இதைத் தொடர்ந்து அவரிடம், `ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள `சர்கார்' படத்தின் போஸ்டரில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது. இதை நீக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், `எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் மது குடிக்கும் காட்சிகளும் புகைபிடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருக்காது. அதனால், நடிகர்கள் தங்களது படங்கள் மூலமாக மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துரைக்க வேண்டியது அவசியம். திரைப்படத்துறையினர்களும் லாப நோக்கமின்றி சமுதாயத்துக்காக செயல்பட வேண்டும். மேலும், சமுதாய நலன் கருதி நடிகர்களும் சினிமாவில் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் அரசு தீவிரம் காட்டி வருவதைப்போல் சிகரெட்டுக்கும் தடை விதிக்கலாம். ஆனால், மத்திய அரசு சட்டம் இயற்றினால்தான் சிகரெட்டை தடை செய்ய முடியும்' என்றார்.