வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:05 (07/07/2018)

`கன்னியாகுமரிக்குள் நோ என்ட்ரி!’ - தமிழிசைக்கு பொன். ராதாகிருஷ்ணனின் செக்?!

`` அன்புமணி, திருமாவளவன், தினகரன் ஆகியோருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார் தமிழிசை. அவரால் பொன்னாரை எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை" என்கின்றனர் பா.ஜ.க-வினர்.

`கன்னியாகுமரிக்குள் நோ என்ட்ரி!’  - தமிழிசைக்கு பொன். ராதாகிருஷ்ணனின் செக்?!

பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகம் வரும்போதெல்லாம் மாநிலத் தலைவர் பதவி குறித்த சர்ச்சை எழுவது வழக்கம். இந்தமுறை, பொன்னாரை குறிவைத்துக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளனர் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர். ' தலைவராகப் பொறுப்பேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட கன்னியாகுமரியில் தமிழிசையால் கால்பதிக்க முடியவில்லை. இதற்குக் காரணம், பொன்னாரின் அரசியல்' என்கின்றனர் பா.ஜ.க-வினர். 

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில், வரும் 9-ம் தேதி கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச இருக்கிறார் அமித் ஷா. ஏற்கெனவே இரண்டு முறை தள்ளிப்போன அவரது சுற்றுப்பயணம், இந்தமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 'நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, இந்தக் கூட்டத்தில் இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்த இருக்கிறார் தேசியத் தலைவர்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். அதேநேரம், 'அமித் ஷா வருகையின்போது, உட்கட்சிப் பூசல்களும் வெடிக்கலாம்' என்கின்றனர். ``ஒடிஸாவில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதற்கு முக்கியக் காரணம், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் அந்த மாநில பா.ஜ.க தலைவரும் இணைந்து செயல்பட்டதுதான். 'அதேபோல், தமிழ்நாட்டிலும் மாநிலத் தலைவருடன் இணைந்து செயல்படுங்கள்' என பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டது அகில இந்திய தலைமை.

பொன்.ராதாகிருஷ்ணன்ஆனால், தலைமையின் உத்தரவுப்படி அவர் செயல்படுவதில்லை. மாவட்டத் தலைவர்களிடம், ' என்னை மட்டும் முன்னிறுத்துங்கள்' என வலியுறுத்துகிறார். மாநிலத் தலைவருடன் இணைந்து செயல்பட அவருக்கு விருப்பமில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார் தமிழிசை. பொதுவாக, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் பதவிக்கு வேறொருவரைக் கொண்டு வருவார்கள். இரண்டாவது முறையும், 'தமிழிசையே நீடிக்கட்டும்' என வாய்மொழியாக உத்தரவு போட்டார் அமித் ஷா. இதற்குக் காரணம், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு செக் வைக்க வேண்டும் என்பதுதான். தொடர்ந்து தமிழிசைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை பொன்னார் ரசிக்கவில்லை" என விவரித்த பா.ஜ.க முக்கிய நிர்வாகி ஒருவர், 

`` மாநிலத் தலைவர் பதவிக்கு தமிழிசை வந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட கன்னியாகுமரி மாவட்டத்தில் அவரால் கால்வைக்க முடியவில்லை. தாணுலிங்க நாடார், குமரி பாலன் ஆகியோரது நினைவு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியவில்லை. மாநிலத் தலைவராக ஒரு பொதுக்கூட்டத்தைக்கூட அவரால் அங்கு கூட்ட முடியவில்லை. ' மாவட்டத்துக்குள் அரசியல் செய்ய வரக்கூடாது' என உறுதியான உத்தரவை போட்டிருக்கிறார் பொன்னார். இதைப் பற்றி கட்சி மேலிடத்தில் புகார் கூறவும் தமிழிசை விரும்பவில்லை. ' இப்படியே பயந்துகொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாது. தைரியமாக வாருங்கள்' என சில நிர்வாகிகள் கூறியபோதும், மௌனம் காக்கிறார் தமிழிசை.

' தலைவர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்' என்ற மனநிலையில் அவர் இருக்கிறார். பொன்.ராதாகிருஷ்ணனின் அரசியலை மட்டுப்படுத்தத்தான் பதவிக்கு வந்தார் தமிழிசை. இதை உறுதிப்படுத்திக்கொள்ளக் கூட தமிழிசை விரும்பவில்லை. கன்னியாகுமரியில் உள்ள ஒன்றியத் தலைவர்கள் எல்லாம் பொன்னார் சொல்வதைத்தான் கேட்கின்றனர். அவர்கள் யாரும் மாவட்டத்துக்குள் தமிழிசை வருவதை விரும்புவதில்லை. அன்புமணி, திருமாவளவன், தினகரன் ஆகியோருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார் தமிழிசை. அவரால் பொன்னாரை எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை" என்றார் விரிவாக.