வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (07/07/2018)

கடைசி தொடர்பு:14:44 (07/07/2018)

''அவ அப்படியே சாகட்டும்னு பிள்ளைக சொல்லிடுச்சுங்க!'' - பேருந்து நிலையத்தில் குடியிருக்கும் பவளக்கொடி

"எனக்குக் கால் வலிகூட பெருசா தெரியலை தம்பி. அவங்க சொன்ன அந்த வார்த்தைகள்தான் வலிக்குது. புருஷன், பிள்ளைக மேலே பாசத்தை மட்டும்தானே காண்பிச்சேன். அவங்க வெறுப்பை ஏன் அள்ளிக் கொட்டறாங்க?"

னித மனம் கவலைகளால் நொறுங்கும்போது, ஓடோடி வந்து மருந்தாக இருப்பது அம்மா, அப்பா, தங்கை, அண்ணன் போன்ற உறவுகளின் ஆறுதல் வார்த்தைகளே. எத்தனை கோடி பணம் வைத்திருந்தாலும், உறவுகள் தரும் அரவணைப்புக்கு, ஒரு நலம் விசாரிப்புக்கு, ஈடு இணை இருக்க முடியாது. அந்த  உறவுகளின் பாசப்பிணைப்பு எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை. கரூரிலிருந்து அரவக்குறிச்சி போகும் வழியில், கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புத்தாம்பூரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தையே தனது வீடாக மாற்றிக்கொண்டு குடியிருக்கும் பவளக்கொடி அம்மாவின் நிலைமையும் அதுதான்.

பவளக்கொடி

கணவர், பிள்ளைகள் என உறவுகளால் தூக்கி எறியப்பட்ட காகிதமாகக் கிடக்கிறார். டெம்போ வேன் மோதி அவரின் இடது கால் எலும்பு முறிந்திருந்தது. அதற்கு தானே கட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறார். அந்த வழியாகப் போவோர் வருவோரிடம், `அய்யா, மவராசா... வவுறு வங்கொலையா பசிக்குது. டீ, பொரை வாங்கிக்கொடுங்க சாமி'' என அவமானத்துடன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் இந்தக் கோலத்துக்குப் பின்னால், ஆயிரம் சோகங்களும், கைகழுவிய உறவுகளின் மீது மறுபடியும் பாசக்கொடியாகப் படர மாட்டோமா என்கிற ஏக்கமும் இருப்பது புரிந்தது.

வேறு வேலையாக அந்தப் பக்கம் சென்றபோது இந்தக் காட்சியைக் கண்டோம். நம் புகைப்படக்காரர் அருகில் தென்பட்ட கடையிலிருந்து ரொட்டி பாக்கெட்கள், தேநீர், மினரல் வாட்டர் பாக்கெட் வாங்கிவந்து, அவரிடம் கொடுத்து, "சாப்பிடுங்கம்மா. இங்கே ஹோட்டல் இருந்திருந்தா, சாப்பாடு வாங்கியிருக்கலாம்" என்றார்.

பவளக்கொடி அம்மாவின் கால்

நான்கைந்து பிளாஸ்டிக் சாமான்கள், கிழிந்த பாய், பழைய அலுமினியத் தட்டு, துணி மூட்டை  என அந்த இடமே, பவளக்கொடி அம்மாவின் சோகக் கதையைச் சொல்லியது. இடது காலில் எலும்பு முறிந்த இடத்தில் சீழ் பிடித்து, ஈக்கள் முகாமிட்டிருந்தன. அத்தனை ரொட்டிகளையும் வேகவேகமாகத் தின்றுவிட்டு, சூடான டீயைக் குடித்து முடித்து, சற்றுத் தெம்பாக உணர்ந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

``எனக்குச் சொந்த ஊர் இங்கிருந்து 50 கிலோமீட்டர்ல இருக்குற கொப்பம்பட்டி. என் புருஷன் பேர், சுப்ரமணியன். ரெண்டு பையன்களும் ஒரு பொண்ணும் இருக்காங்க. எனக்கு 55 வயசாவுது. எங்களுக்கு ஓட்டைக் குடிசையைத் தவிர வேற சொத்தில்லை. என் புருஷன் குடிகாரர். குடின்னா உங்க வீட்டுக் குடி, எங்க வீட்டுக் குடி இல்லை. மொடாக் குடி. நான் கூலி வேலைக்குப் போய் மாடா உழைச்சு மூணு பிள்ளைகளையும் வளர்த்தேன். சோலிக்குப் போகாத என் புருஷன், நான் கொண்டுவர்ற வருமானத்தையும் அடிச்சுப் புடுங்கிட்டு போய் குடிச்சு அழிப்பார். நேரா வீட்டுக்கு வந்து என்னை இழுத்துப் போட்டு மாட்டடி அடிப்பார். `சே'னு இருக்கும் தம்பிங்களா. பிள்ளைகளுக்காகப் பொறுத்துட்டேன். நான் நாய் பாடு பேய் பாடு பட்டாலும், பிள்ளைகளை வளர்த்து, கல்யாணமும் பண்ணிவெச்சேன்'' என்றபடி கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார்.

பவளக்கொடி அம்மா

``ஆளா, பிள்ளைக வளர்ந்ததும் என்னை காலம் முழுக்க அன்பா பார்த்துகிட்டு கஞ்சி ஊத்தும்'னு நம்பியிருந்தேன். ஆனா, மூணுமே என்னை பாரமா நினைச்சு ஒதுக்கிவெச்சுருச்சுங்க. அஞ்சு வருஷமாக என்னை யாருமே கண்டுக்கலை. என் புருஷன் இன்னும் அதிகமாக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சார். எனக்கு உயிர் போய் உயிர் வரும். உடம்பெல்லாம் ரணம் ரணமா ஆயிரும். பெத்த பிள்ளைக தட்டிக் கேட்கும்னு நெனச்சா, அதுங்க கண்டுக்கறதே இல்லே. இத்தனை நாள் சகிச்சுக்கிட்டு வாழ்ந்தோம். பிள்ளைகளும் அநாதையா விட்டுட்டாங்களே. இதுதான் உலகம்'னு புரிஞ்சுட்டு மனசைத் தேத்திக்கிட்டேன்.

என் புருஷனோ, குடியிருந்த ஒத்த தொத்த வீட்டையும் குடிக்காக விற்கப் பார்த்தார். தடுத்தும் கேட்கலை. வெறுப்பாகி மனம்போன போக்குல நடந்தேன். புத்தி பேதலிச்ச மாதிரி வந்தப்போதான், வேகமா வந்த டெம்போ வேன் மோதிட்டு நிக்காமப் போயிடுச்சு.
இடது கால்ல கடுமையான அடி. எலும்பு முறிஞ்சுப் போச்சு. நானே கட்டுப் போட்டுட்டு, இந்த இடத்துல படுத்துட்டேன். பார்கிறவங்ககிட்ட, `சாப்பாடு வாங்கித் தாங்க'னு கேட்பேன். பலர் திட்டுவாங்க. சிலர் இரக்கப்பட்டு, டீ, பொரைனு வாங்கித் தருவாங்க.

சாதிக் அலிசில பொம்பளைங்க, பழைய துணி, பாத்திரங்கள், பாயைக் கொடுத்து உதவினாங்க. இதையே வீடாக்கி வாழ்ந்துட்டு வர்றேன். ஒரு மவராசன் என்னை வண்டியில அழைச்சுட்டுபோய் வைத்தியம் பார்க்கிறதாச் சொன்னார். `வேண்டாம்'ன்னுட்டேன். என் நிலைமையை ஒரு நல்ல மனுசன் மூலமா, என் புருஷன், பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்தினேன்.

அவங்களோ, `அந்த மூதேவி அங்கேயே கெடந்து சாவட்டும்'னு கல் மனசோடு சொல்லியிருக்காங்க. எனக்குக் கால் வலிகூட பெருசா தெரியலை தம்பி. அவங்க சொன்ன அந்த வார்த்தைகள்தான் வலிக்குது. புருஷன், பிள்ளைக மேலே பாசத்தை மட்டும்தானே காண்பிச்சேன். அவங்க வெறுப்பை ஏன் அள்ளிக் கொட்டறாங்க? அவங்க என்னைப் பாசத்தோடு அழைச்சுட்டுப் போகனும்ன்னு நினைக்கிறேன். அதுவரைக்கும் காலுக்கு வைத்தியம் பார்க்க போறதில்லை'னு வைராக்கியமா வாழறேன். எனக்கு உதவ நினைக்கிறவங்ககிட்டயும், `என் புருஷன், புள்ளைகளை வந்து என்னை அழைச்சுட்டுப் போகச்சொல்லுங்க'னுதான் கேட்கறேன். என் பாசப்போராட்டம் ஜெயிக்கும் தம்பி" என்கிற அந்தத் தாயின் குரலில் அன்புக்கான ஏக்கமும் வைராக்கியமும் கலந்திருந்தது.

பவளக்கொடியின் நிலைமையை, `இணைந்த கைகள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி கவனத்துக்குக் கொண்டுபோனோம். ``அந்தத் தாய்க்கு வைத்தியமும், தங்குவதற்கான  இடம், சாப்பாடு போன்றவற்றுக்கு இரண்டொரு நாள்களில் ஏற்பாடு செய்கிறோம்" என்று உறுதி அளித்திருக்கிறார்.

பாசப்போராட்டம் நடத்தும் தாய்க்கு நல்லதே நடக்கும்.  


டிரெண்டிங் @ விகடன்