வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:03 (07/07/2018)

``வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த அரசு சிறப்புத் திட்டம்!" - அமைச்சர் தகவல்

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் உள்ள 159 மனைகளை வரன்முறைப்படுத்தி அதற்கான உத்தரவுகளைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் வரன்முறைப்படுத்தப்படாத 159 மனைகளை வரன்முறைப்படுத்தி, அதற்கான உத்தரவுகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். இவ்விழாவில் பேசிய அமைச்சர், ``கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20.10.2016க்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்கியவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கும் வங்கிகளில் கடன் பெறுவதற்கும் மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானதை எண்ணி தமிழக அரசு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 1 சதுர மீட்டருக்கு ரூ.310 கட்டணம் செலுத்தி மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம். இக்கட்டணத்தில் ரூ.250 நகராட்சியில் வளர்ச்சிக் கட்டணமாகவும், ரூ.60 அரசின் கருவூலத்துக்கும் கட்ட வேண்டும்.

கரூர் நகராட்சியில் 354 அனுமதியற்ற மனைப்பிரிவுகளும், அதில் 18,134 மனைகளும் வரன்முறைப்படுத்தப்படாமல் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் 167 கோரிக்கைகள் வரப்பெற்றுள்ள. இதில் 159 மனைகளுக்கு வரன்முறை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.76 லட்சம் வளர்ச்சிக்கட்டணமாகவும், ரூ.8.26 லட்சம் முறைப்படுத்துதல் கட்டணமாகவும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற உள்ளவர்கள் பிரதிவாரம் வெள்ளிக்கிழமை தோறும் கரூர் நகராட்சியில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திப் பயன்பெற வேண்டும். இதேபோல் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பட்டா நிலம் உள்ளவர்களுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைப்பு வழங்க ரூ.4.60 கோடி மதிப்பில் பணிகள்  நடைபெற்று வருகின்றன. குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக ரூ.15.61 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.