வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:18:34 (07/07/2018)

``பி.ஜே.பி. என்னை எதிர்த்தால், எனக்குத்தான் நல்லது!"  -முஷ்டி முறுக்கும் `எடப்பாடி’ பழனிசாமி

'ஜெயலலிதாவால் இரண்டு முறை கூட்டணி விஷயத்தில் ஏமாந்த மோடி, மூன்றாவது முறை எடப்பாடி பழனிசாமியிடம் ஏமாந்துவிடுவதற்குத் தயாராக இல்லை. அதன் விளைவுதான் ரெய்டு நடவடிக்கைகள்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

``பி.ஜே.பி. என்னை எதிர்த்தால், எனக்குத்தான் நல்லது!

நாமக்கல் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில் மூன்றாவது நாளாக ரெய்டு தொடர்ந்து கொண்டிருப்பது ஆளும்கட்சியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 'பா.ஜ.க கூட்டணியை என்ன நோக்கத்துக்காக ஜெயலலிதா நிராகரித்தாரோ, அதே மனநிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். ரெய்டுக்கான தொடக்கப்புள்ளி இங்கிருந்துதான் தொடங்குகிறது' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேசியக் கட்சிகளான பா.ஜ.கவும் காங்கிரஸும் முழுவீச்சில் களமிறங்கிவிட்டன. ’ஒரே நாடு... ஒரே தேர்தல்’ என்ற அடிப்படையில் தேர்தல் செலவீனங்களைக் குறைப்பதற்காக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலை ஒரேநேரத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு மாநிலக் கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது நாமக்கல்லில் நடந்து வரும் ரெய்டுகள் அ.தி.மு.கவின் கொங்கு மண்டல அமைச்சர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுவரை நடந்த ரெய்டில் நான்கு கோடி ரூபாய்களும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த ரெய்டின்போது கிறிஸ்டி நிறுவனத்தின் காசாளர் ஒருவர் கைது நடவடிக்கைக்குப் பயந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார். இந்த சம்பவத்தில் அவருக்குப் பலமான காயம்  ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

``முதல் நாள் ரெய்டு நடந்தபோது, 'ஐ.டி துறையின் வழக்கமான சோதனைதான்' என நினைத்தனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக ரெய்டு நடப்பதன் பின்னணியை அமைச்சர்களும் அறிந்து வைத்துள்ளனர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி மூலமாக, எடப்பாடி பழனிசாமியை வளைப்பதற்கான வேலைதான் இது. அதற்கான ஆவணங்களைக் குடைந்துகொண்டிருக்கிறது வருமான வரித்துறை" என விவரித்த கொங்கு மண்டல அ.தி.மு.க சீனியர் ஒருவர், `` சசிகலா தயவில் முதல்வர் பதவியை எட்டிப் பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு, அடுத்து வந்த நாள்களில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள மோடியின் தயவு அவசியமானதாக இருந்தது. 'என்னுடைய ஒரே பிக் பாஸ் மோடிதான். அவரைத் தவிர, யாராலும் என்னை அசைக்க முடியாது. ஓராயிரம் தினகரன்கள் வந்தாலும் என்னை அசைக்க முடியாது' என ஆதரவாளர்களிடம் கூறியவர் எடப்பாடி பழனிசாமி. பெரும்பான்மையை நிரூபித்தது முதல் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வரையில் எடப்பாடி பழனிசாமி அளவுக்கு வேறு எந்த முதல்வருக்காவது இந்தளவுக்கு அதிர்ஷ்டக் காற்று வீசியிருக்குமா என்பது சந்தேகம்தான். 

ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, தனது இன்னொரு முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 'ஜெயலலிதா பாணியில் கூட்டணிக்குள் பா.ஜ.கவைச் சேர்க்காமல் கழட்டிவிட்டுவிடுவாரோ?' என்ற எண்ணம் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அதற்கு உதாரணமாக சில சம்பவங்களும் நடந்தன. ஹஜ் மானியம் உள்பட சிறுபான்மையினர் நலன் தொடர்பான விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் மீண்டும் முதல்வராக வேண்டும் என்றால், சிறுபான்மையினர் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்வதுதான் சரியான முடிவு என நினைக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் நல்ல நட்பில் இருந்தவர் மோடி. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் அணி சேர விரும்பினார். இதற்கு ஜெயலலிதா சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன்பிறகு சட்டமன்றத் தேர்தலில் அணி சேருவதற்காக போயஸ் கார்டனுக்கே வந்தார். இந்தமுறையும் அவருடைய முயற்சிக்கு ஜெயலலிதா செவிசாய்க்கவில்லை. இதற்கு ஒரே காரணம், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்ததால், 2006 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்குக் கிடைத்த தோல்விதான். சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் போனதற்கு இதுதான் காரணம். இதேநிலைமைதான், 2001 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கும் ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக்கொண்டுதான் பா.ஜ.க கூட்டணி என்றாலே அச்சப்படுகிறார் ஸ்டாலின். மோடி ஆதரவோடு இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தாலும்கூட அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஸ்டாலின் தயக்கம் காட்டுவதற்கும் இதுதான் காரணம். 

பிரதமர் மோடி

 ஜெயலலிதா என்ன நோக்கத்துக்காக பா.ஜ.க கூட்டணியை வெறுத்தாரோ, அதேவழியில்தான் எடப்பாடி பழனிசாமியும் யோசிக்கிறார். தமிழர் நலன் தொடர்பாகப் பேசும் கட்சிகள்கூட, ' இது எடுபிடி அரசு' என விமர்சிப்பதை முதல்வரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் எதிரொலியாகத்தான் வேல்முருகன், சீமான் உள்ளிட்டவர்கள் மீது அடுத்தடுத்த வழக்குகள் பாய்ந்தன. 'கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளைவிட பா.ஜ.க கூட்டணி முக்கியம் அல்ல' என்ற முடிவுக்கு எடப்பாடி வந்துவிட்டார். அதேநேரம், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைவதை பன்னீர்செல்வம் விரும்புகிறார். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிக அதிகாரங்கள் அவரிடம்தான் உள்ளன. மீண்டும் முதல்வராகத் தொடர விரும்பும் எடப்பாடி பழனிசாமிக்கு, பா.ஜ.க உறவு அவசியமானதாகத் தெரியவில்லை. இதை அறிந்த பிறகுதான் நாமக்கல்லில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க" என்றார் விரிவாக. 

``அரசியல் சூழல்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தியே கூட்டணிகளை இறுதி செய்யும். தங்களை முன்னிறுத்திக் கொள்ளத்தான் கட்சித் தலைவர்களும் விரும்புவார்கள். மக்களின் விருப்பம், அரசியல் தேவைகள் ஆகியவற்றைப் பொறுத்தே இங்கு கூட்டணிகள் உருவாகின்றன. தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளுக்குள் தற்போது என்ன சூழல் உள்ளதோ, அதேநிலைதான் பா.ஜ.க-அ.தி.மு.கவுக்குள்ளும் இருக்கிறது. 'முதலில் யாருக்கு யார் அவசியம்? இந்தக் கூட்டணி தேவையா?' எனப் பல கேள்விகள் எடப்பாடி மனதுக்குள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவால் இரண்டு முறை கூட்டணி விஷயத்தில் ஏமாந்த மோடி, மூன்றாவது முறை எடப்பாடி பழனிசாமியிடம் ஏமாந்துவிடுவதற்குத் தயாராக இல்லை. பா.ஜ.க அணியில் தி.மு.கவைக் கொண்டு வருவதற்கான வேலைகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன.

ஒருவேளை தி.மு.க வராவிட்டால், ஆர்.கே.நகரில் 27 சதவிகித வாக்குகளைத் தக்கவைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமிதான், பா.ஜ.கவுக்கு அடுத்தகட்ட ஆப்ஷனாக இருப்பார். ஆனால், 'தேர்தல் குறித்து இப்போது பேச வேண்டாம். நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என பா.ஜ.க நிர்வாகிகளுக்கு உணர்த்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதை பா.ஜ.கவினர் ரசிக்கவில்லை. இதையடுத்து, ரெய்டு நடவடிக்கை அரங்கேறுவதையும் எடப்பாடி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ' மோடி எதிர்ப்புதான் தினகரனுக்கான செல்வாக்கை உருவாக்கிக் கொடுத்தது. சிறுபான்மையினர் வாக்குகளும் அவரை நோக்கிச் சென்றது. என்னை மத்திய அரசு பழிவாங்கினால், சிறுபான்மையினர் மத்தியில் ஆதரவு பெருகும். சசிகலா குடும்பத்தின் செல்வாக்கு அடிபட்டுப் போகும்' என்ற மனநிலையில் இருக்கிறார்" என்கின்றனர் அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகிகள். 

`அரசியல் என்பதே சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதுதான்' என்பார்கள். தினகரனை வீழ்த்த ரெய்டு அஸ்திரத்தைத் தொடுத்த மத்திய அரசு, தற்போது எடப்பாடியை நோக்கி பிரம்மாஸ்திரத்தை வீசத் தொடங்கியிருக்கிறது. அரசியல் ஆட்டத்தில் எடப்பாடி நிலைத்து நிற்பாரா.. கட்சியின் அதிகாரத்தைப் பிடியில் வைத்துள்ள பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் அ.தி.மு.க தொண்டர்கள் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது!