அரசுப் பள்ளி மாணவனுக்கு எம்.பி.பி.எஸ் சீட்!- `டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன்' என பேட்டி

சென்னையில் கடந்த 5 நாள்களாக நடந்த கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் படித்த மாணவன் அலெக்ஸ்பாண்டியனுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ``நான் டாக்டராகி கிராமப் புறங்களில் உள்ள ஏழைகளுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் மாணவன்.

சென்னையில் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு கடந்த 2-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை கடந்த 5 நாள்களாக நடந்த கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் படித்த ஒரே ஒரு மாணவனுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அவர் கடலூர் மாவட்டம் மா.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன்.

மா.புடையூர் கிராமத்தில் உள்ள மங்களூர் மாதிரி பள்ளியில் 7-ம் வகுப்பிலிருந்து படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் 465 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தற்பொழுது நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 1111 மதிப்பெண்  பெற்றுள்ளார். டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த அலெக்ஸ்பாண்டியன் சென்னையில் அரசு நடத்திய நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஒரு மாதம் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வில் 720க்கு 309 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். எனவே, எம்.பி.பி.எஸ் படிப்புக்காக விண்ணப்பித்திருந்தார். நேற்று நடந்த கலந்தாய்வில் அலெக்ஸ்பாண்டியனுக்கு திருச்சி மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான இடம் கிடைத்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மகிழ்சியில் மிகுந்த சந்தோஷத்துடன் உள்ளனர் அவரின் குடும்பத்தினர். அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் முதன் முதலாக எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்துள்ளதை மிகப்பெரிய சாதனையாக அவரும், அவரின் பெற்றோரும் கருதுகின்றனர். மாணவன் அலெக்ஸ்பாண்டியன் தந்தை ராஜன் சத்துணவு அமைப்பாளர். தாயார் மாரிமுத்தாள், ஒரு சகோதரர், ஒரு சகோதரியும் உண்டு. 

அலெக்ஸ்பாண்டியன்

இது குறித்து மாணவர் அலெக்ஸ்பாண்டியன் கூறுகையில், ``கடலூர் மாவட்டத்தில் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பகுதி எங்கள் ஊர். எனது தந்தை சத்துணவு அமைப்பாளராக உள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் மங்களூர் மாதிரி பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் 465 மதிப்பெண்கள் எடுத்தேன். அப்பொழுதே டாக்டராக வேண்டும் என்பது எனது லட்சியம். எனது ஆசிரியர்களின் முயற்சியால் அரசு நீட் தேர்வு பயிற்சியை மேற்கொண்டேன். எனது வெற்றிக்கு பெற்றோரின் ஒத்துழைப்பும், ஆசிரியர்களின் ஆதரவும்தான் காரணம். அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் சாதிக்க முடியும் என்பதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு. நான் டாக்டராகி கிராமப் புறங்களில் உள்ள ஏழைகளுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்'' என்று கூறினார் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!