வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:15:56 (07/07/2018)

உச்சநீதிமன்றம் தீர்ப்பால் கிரண்பேடியை புறக்கணித்த அரசு அதிகாரிகள் !

உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பால் அரசு அதிகாரிகள் ஆளுநர் கிரண்பேடியை புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கிரண்பேடி

ஆளுநர் அதிகாரம் தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் கடந்த 2017 டிசம்பர் மாதம் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்றிருந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூஷன் ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த 4-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ``யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அங்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அந்த அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் எதுவும் கிடையாது. அமைச்சரவையில் சிபாரிசுப்படிதான் செயல்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

நாராயணசாமி

அதையடுத்து, ``உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கு 100-க்கு 110% பொருந்தும். அமைச்சரவை எடுக்கும் முடிவை அனுப்ப வேண்டுமே தவிர அதில் கை வைக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் கிரண்பேடியின் பார்வைக்காக மட்டுமே இனி கோப்புகளை அனுப்புவோம். அதேபோல புதுச்சேரி மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்கு ஆளுநர் கிரண்பேடிக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் அவருக்கில்லை. அரசியல் சாசனத்தின் தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுபவர்கள் மீது நானே வழக்குத் தொடருவேன்” என்று தெரிவித்திருந்தார் முதல்வர் நாராயணசாமி. ஆனால், ``உச்சநீதிமன்றம் டெல்லிக்கு அளித்துள்ள தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது” என்றும் ``டெல்லி வேறு புதுச்சேரி வெறு” என்றும் பதிலளித்தார் கிரண்பேடி.

ஆளுநராகப் பதவியேற்றதில் இருந்து வார இறுதி நாள்களில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுத் துறையின் உயர்  அதிகாரிகளுடன் சைக்கிளில் ஆய்வுக்குச் செல்வது ஆளுநர் கிரண்பேடியின் வழக்கம். ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் அதைத் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார். அதன்படி இன்று காலை ஊசுடு ஏரிக்கு சைக்கிளில் ஆய்வுக்குச் சென்றார் கிரண்பேடி. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவருடன் துறை அதிகாரிகள் யாருமே செல்லவில்லை. வனத்துறையின் இயக்குநர் குமார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே அவருடன் சென்றனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி முதல்வர் நாராயணசாமி போட்ட வாய்மொழி உத்தரவு காரணமாகவே அதிகாரிகள் கிரண்பேடியை புறக்கணித்ததாக தெரிவிக்கின்றனர் ஆளுங்கட்சியினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க