வைகோ எங்கள் கட்சியையே நினைத்துக்கொண்டு இருக்கிறார்..! - நாம் தமிழர் கட்சி விளக்கம் | Nam Thamizhar explain about Vaiko's accusation

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:15:56 (07/07/2018)

வைகோ எங்கள் கட்சியையே நினைத்துக்கொண்டு இருக்கிறார்..! - நாம் தமிழர் கட்சி விளக்கம்

``வைகோ எந்த நேரமும் நாம் தமிழர் கட்சியையே நினைத்துக்கொண்டிருப்பதால்தான் நீதிமன்றத்தில் அவரை அவதூறாகப் பேசிய வழக்கறிஞர்களை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என மதுரை விமான நிலையத்தில் குற்றம்சாட்டி பேசியுள்ளார்'' என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தடா சந்திரசேகர், ``ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி மக்கள் பல நாள்களாக எவ்வித கட்சி அடையாளமுமின்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட மக்கள் தன்னெழுச்சியோடு பேரணியாகச் சென்றனர். அந்தப் பேரணியில், நாம் தமிழர் கட்சியினரும் கலந்துகொண்டனர். இதில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

மக்கள் பிரச்னை என்றால் முதலில் நிற்பது நாம்தமிழர் கட்சிதான். அதனால்தான் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களை போலீஸார் தேடி கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தெருக்களில் புகுந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தூத்துக்குடி ஊருக்குள்ளேயே  வர முடியாத சூழலில் உள்ளனர். ஜனநாயக நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது அராஜகம் நிறைந்த ஆட்சியா? என்பது சந்தேகமாக உள்ளது.   

எங்களது கட்சியினர் மீதான வழக்குகள், கைதினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளோம். சில நாள்களில் நடைபெற உள்ள வழக்கறிஞர்கள் மாநாட்டில் கூட இந்த வழக்குகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க உள்ளோம்.  

முற்றுகைப் போராட்டத்தில் எங்களது கட்சியினர் தீ வைத்ததாகவோ, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவோ போலீஸார் காரணம் கூறுகிறார்கள். அப்படி வீடியோ ஆதாரம் ஏதும் இருந்தால் அதனை போலீஸார் எங்களிடம் தெரிவிக்கலாம். பிரணாப் முகர்ஜிக்கு எதிராகக் கறுப்புக்கொடிகாட்டிய வழக்கில் ஆஜராக நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வந்திருந்த வைகோவை, அவதூறாகப் பேசிய சில வழக்கறிஞர்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என மதுரை விமான நிலையத்தில் கூறியுள்ளார்.

அந்த வழக்கறிஞர் எங்களது கட்சியைச் சார்ந்தவர்களே அல்ல. அவர்களுக்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்தவர்கள் எனத் தெரிகிறது. சமீபகாலமாக நாம்தமிழர் கட்சி மீது வைகோ பொய்யான குற்றச்சாட்டுகளை  பரப்பி வருகிறார். இது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

எந்த நேரமும் நாம் தமிழர் கட்சியைப் பற்றி அவர் நினைத்துக்கொண்டிருப்பதால்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறோம். அவர் எங்கள் கட்சியை மனதில் நினைத்துக்கொண்டே கட்சியின் பெயரை உச்சரித்து வருவது நினைத்து மகிழ்ச்சிதான்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க