செயின் கொள்ளையர்களைப் பிடித்த மூன்று பேருக்கு நேர்ந்த துயரம்!

செயின் கொள்ளையர்களுடன் போராடிய மூன்று பேர் மாதிரி படம்

சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்க செயினைப் பறிக்க முயன்ற கொள்ளையர்களை மூன்று பேர் மடக்கிப்பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களைக் கொள்ளையர்கள் கத்தியால் குத்தி தப்பி ஓடினர்.

சென்னையை அடுத்த கீழ்கட்டளைப் பகுதியைச் சேர்ந்த மாலா, தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவர் கீழ்கட்டளை ஏரிக்கரைப் பகுதியில் தனியாக நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மாலாவின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்த மாலா சங்கிலியைப் பிடித்துக்கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார். திருடன் திருடன் என சத்தம் போட்டார். இந்தச் சமயத்தில் அவ்வழியாக பைக்கில் கீழ்கட்டளையைச் சேர்ந்த கலைவாணன், சுதாகர், மோகனசுந்தரம் ஆகியோர் வந்தனர். 

அவர்கள், கொள்ளையர்களை மடக்கிப்பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கத்தியால் கலைவாணன், சுதாகர், மோகனசுந்தரம் ஆகியோரை வெட்டினர். இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இதற்குள் அந்தப் பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். அதைப்பார்த்த கொள்ளையர்கள் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். காயமடைந்த மூன்று பேரையும் மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர். தப்பியோடிய கொள்ளையர்களைப் பொதுமக்களில் சிலர் பைக்கில் விரட்டினர். அப்போது, ஒரு கொள்ளையன் பொதுமக்களிடம் சிக்கினான். அவனைப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பிறகு அவனை மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பிடிப்பட்ட கொள்ளையனின் பெயர் அசோக், செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவனை போலீஸார் கைது செய்து, அவனுடன் வந்த இன்னொரு கொள்ளையன் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் மாலாவின் செயின் தப்பியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!