`தப்பித்தாரா... தற்கொலைக்கு முயன்றாரா?!' - வருமான வரித்துறை அதிகாரிகளை மிரள வைத்த காசாளர்

வருமான வரித்துறையின் கைது நடவடிக்கைக்குப் பயந்து, முதல்மாடியில் இருந்து குதித்திருக்கிறார் நாமக்கல் கிறிஸ்டி ஃபிரைடு கிராம்ஸ் நிறுவனத்தின் காசாளர். 

காசாளர்

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்குப் பொருள்களை விநியோகம் செய்து வரும் திருச்செங்கோடு, கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த மூன்று நாள்களாக வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருச்செங்கோடு, நாமக்கல், கோவை, ஈரோடு என இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் சோதனையில் 4 கோடி ரூபாயும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று திருச்செங்கோட்டில் நடந்த சோதனையின்போது, அந்நிறுவனத்தின் காசாளரான கார்த்திகேயனை தனியே அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவர் கைது செய்யப்படுவது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், விசாரணை முடிந்து வெளியே வந்த சில நிமிடங்களில் முதல் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.

இதை வருமான வரித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சம்பவத்தில் கார்த்திகேயனின் முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வருமானவரிச் சோதனையின்போது காசாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிகாரிகளின் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. 'தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்தார்' என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட, ' கிறிஸ்டியின் அனைத்து கணக்கு விவரங்களையும் அவர் அறிவார். அந்த உண்மைகளைக் கூறிவிடக் கூடாது என்பதற்காகத் தற்கொலைக்கு முயன்றார்' என நிறுவன ஊழியர்களும் தெரிவிக்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!