வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:20 (07/07/2018)

காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி நாகர்கோவிலில் நின்று செல்லும்!

காந்திதாமில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி நாகர்கோவில் டவுனில் 5 நிமிடம் நின்று செல்லும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரயில்

குஜராத் மாநிலம் காந்திதாமிலிருந்து திருநெல்வேலிக்கு வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. முழுவதும் ஏ.சி. பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் எல்லா திங்கள்கிழமைகளிலும் மதியம் 1.50 மணிக்கு காந்திதாமிலிருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 11 மணிக்கு திருநெல்வேலி சென்று சேருகிறது. காந்திதாமிலிருந்து புறப்படும் இந்த ரயில் அகமதாபாத், வடோதரா, சூரத், பனவேல், வசாய்ரோடு, ரத்தினகிரி, மட்காவ், கார்வாட், மங்களூர் ஜங்ஷன், கோழிக்கோடு, ஷெரனூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும். இறுதியாக திருநெல்வேலியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை தோறும் நெல்லையிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக இந்த ரயில் சென்றாலும் அங்கு நிற்பதில்லை. குமரி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில்கூட நிற்காமல் செல்லும் இந்த ரயில் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன்

இதையடுத்து காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு ஸ்டேஷனிலும் நிற்காமல் செல்லும் காந்திதாம் எஸ்க்பிரஸ் குறித்த தகவல் எனது கவனத்துக்கு வந்தது. குமரி மாவட்டம் பல சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கியது என்பதால், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை நிறுத்திச் செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரைத் தொடர்புகொண்டு தெரிவித்தேன். இதையடுத்து நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் காந்திதாம் ரயில் 5 நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.