வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (07/07/2018)

கடைசி தொடர்பு:16:40 (07/07/2018)

பாலக்காடு - புனலூர் இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிப்பு!

பாலக்காடு - புனலூர் இடையே இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை நெல்லை வரை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் இரு மாநில ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

பாலருவி எக்ஸ்பிரஸ்

தமிழக - கேரள எல்லைப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இரு மாநிலங்களிலும் நிறைய அருவிகள் அமைந்துள்ளன. குற்றாலம், குண்டாறு பகுதிகளில் உள்ள அருவிகளுக்கு கேரளாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அதேபோல, கேரளாவுக்குள் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவி, பாலருவி, தென்மலை சுற்றுச்சூழல் பூங்கா ஆகிய இடங்களுக்கு தமிழகத்தில் இருந்து பயணிகள் செல்கிறார்கள். 

இந்தநிலையில், செங்கோட்டையிலிருந்து புனலூர் வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டபோதிலும் நெல்லையில் இருந்து நேரடியாக ரயில் இல்லாததால் இரு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தார்கள். அதனால், நெல்லையிலிருந்து செங்கோட்டை வழியாக புனலூர் வரை ரயில் சேவை இயக்க வேண்டும் என ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். 

அதை ஏற்று புனலூர் - பாலக்காடு - புனலூர் பாலருவி ரயிலை நெல்லை வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `புனலூர் - பாலக்காடு - புனலூர் பாலருவி எக்ஸ்பிரஸ் (16791/16792)  நெல்லை வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. 9-ம் தேதி முதல் இந்த ரயில் நெல்லை வரை நீட்டிக்கப்படுகிறது. நெல்லையில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி,  செங்கோட்டை, நியூ ஆரியங்காவு, தென்மலை வழியாகச் சென்று அதிகாலை 3.20 மணிக்கு புனலூர் சென்றடையும். அதேபோல, மறு மார்க்கத்தில் புனலூரில் அதிகாலை 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதிகாலை 6.30 மணிக்கு நெல்லையை வந்தடையும்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், இரு மாநில பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.