`துப்பாக்கிச்சூடு குறித்த ஒருநபர் ஆணையத்தால் நீதி கிடைக்காது' – சி.பி.எம். குற்றச்சாட்டு  

``தமிழகத்தில் இதுவரை நடந்த எந்த விசாரணைக் கமிஷனிலும் நீதி கிடைத்ததில்லை. அதேபோல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை செய்ய அரசு நியமித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் விசாரணையால் எந்த நீதியும் கிடைக்காது” என சி.பி.எம். கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சி.பி.எம். கட்சியின் மாவட்டச் செயலாளார் அர்ச்சுணன்

தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.எம். கட்சியின் மாவட்டச் செயலாளார் அர்ச்சுணன், ``வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆலையை இயக்க அனுமதி கேட்டு முறையீடு செய்திருந்தது. ஆனால், தமிழக அரசின் தடை உத்தரவு மற்றும் அரசாணை வெளியீட்டில் தலையிட முடியாது எனக் கூறி பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துவிட்டது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகார வழக்கில் சி.பி.எம். கட்சி சார்பில் விரைவில் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு அளிக்க உள்ளோம். அதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் விசாரணை ஆணையம் என நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தினால் இதுவரை எந்த நீதியும் கிடைத்தது இல்லை. அதனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, விசாரணை செய்ய தமிழக அரசால்  அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் விசாரணை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.எம். கட்சி சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இந்த ஆணையம் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளையும், போலீஸாரையும் காப்பாற்றும் வகையிலேயே செயல்படுகிறது. முதலில், மே 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு பற்றி மட்டும் விசாரணை செய்யப்படும் என, கூறப்பட்டிருந்தது. எங்கள் வழக்குக்குப் பிறகு, இரண்டாம் நாள் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற 23-ம் தேதி பற்றியும் விசாரணை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். அதேபோல்,  முதலில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தகவல் தரலாம் எனச் சொன்னவர்கள், இப்போது, கலவரம் பற்றித் தெரிந்தவர்கள் தகவல் தரலாம் என ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுவரையில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அதிகாரிகளைக் காப்பாற்றும், ஆணையத்துக்கு அவர்களைத் தண்டிக்க அதிகாரம் இல்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது, 302 பிரிவின்படி வழக்கு தொடர வேண்டும். இச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்பது சி.பி.எம். கட்சியின் கோரிக்கை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!