வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (07/07/2018)

கடைசி தொடர்பு:17:56 (07/07/2018)

அழகிரியின் தடாலடிக்கு ஸ்டாலின் மௌனம் ஏன்?

``மெய்யான செயல்வீரர்கள் என்னிடம்தான் இருக்கிறார்கள். தி.மு.க.-வில் இப்போது இருக்கிறவர்கள் எல்லாம் பதவிக்காகத்தான் இருக்கிறார்கள்'' - அழகிரி

அழகிரியின் தடாலடிக்கு ஸ்டாலின் மௌனம் ஏன்?

`நாலு வார்த்தை பேசினாலும் சும்மா நறுக்னு பேசணும்' என்று ஊர்ப் பக்கம் சொல்லப்படுவதுண்டு. அதுபோல, பேசத் தொடங்கிவிட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. ஆனால், ``அது `நறுக்'கான பேச்சு அல்ல... வெறுப்பால் வந்த பேச்சு'' என்கிறார்கள் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

``உண்மையான செயல்வீரர்கள் என்னிடம்தான் இருக்கிறார்கள். தி.மு.க-வில் இருக்கிறவர்கள் எல்லாம் செயல்படாதவர்கள். பதவிக்காகத்தான் அங்கே இருக்கிறார்கள்" என்று மு.க.ஸ்டாலினைக் குறிவைத்து நேற்று பாலமேட்டில் நடந்த திருமண விழாவில் மு.க.அழகிரி பேசியது, தி.மு.க-வுக்குள் மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக மு.க.அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், கட்சியையும், ஸ்டாலினையும் இடித்துரைத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதை தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் மற்ற கட்சியினரும் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள். 

`` `கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. வெற்றிபெறாது என்று சாபமிட்டவருக்கு, தி.மு.க-வைப் பற்றிப் பேச எந்த அருகதையுமில்லை; அவர் பின்னால் யாருமில்லை. அந்த விரக்தியில் பேசுகிறார்' என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூறினாலும், மு.க.அழகிரி கூறுவதிலும் உண்மை உள்ளது'' என்கிறார்கள் பொதுவானவர்கள். 

மத்திய அரசில் கேபினட் அந்தஸ்தில் அமைச்சராகப் பதவி வகித்தும், அதன்பின்பு தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பவர்புல்லான பதவியில் தொடந்து இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014- ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்குக் காரணம், அவருடைய ஆதரவாளர்கள், ஸ்டாலினை விமர்சித்து தொடர்ச்சியாக ஒட்டிய சுவரொட்டிகள். அது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அமைத்த கூட்டணியை விமர்சித்தும், ஸ்டாலினுக்கு எதிராகத் தொடர்ந்து ஊடகங்களில் அப்போது பேசியதாலும், அழகிரி மீது, தி.மு.க. தலைமை கடும் கோபம்கொண்டது. 

மு.க.அழகிரி

அதே அளவு கோபம் அழகிரிக்கும் இருந்தது. ஏற்கெனவே தன்னுடைய ஆதரவாளர்களாக இருந்த பி.மூர்த்தி, ஜெயராமன், கோ.தளபதி, மிசா பாண்டியன், எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி, தமிழரசி, தங்கம் தென்னரசு, டாக்டர் சரவணன் எனப் பலரும் ஸ்டாலின் அணிக்குத் தாவியதால், ஆத்திரத்தில் இருந்த அழகிரிக்கு, அதைத்தொடர்ந்து அவருடைய தீவிர ஆதரவாளர்கள் இசக்கிமுத்து, பி.எம்.மன்னன், உட்பட சிலரை கட்சியிலிருந்து நீக்கி அறிவித்ததும் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.  

இது தவிர, ஸ்டாலினே தி.மு.க-வின் முகமாக அறிவித்ததும் அவரே கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவதும் அழகிரியை எரிச்சல் படுத்தியது. இந்த நிலையில்தான் தன்னுடைய ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டு தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியைச் சந்திக்கச் சென்றது பெரும் பிரச்னை ஆனது. அதைத் தொடர்ந்து அழகிரி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 

அவருக்கும் கட்சிக்குமிடையே இடைவெளி அதிகமானது. இதற்கிடையே, அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் கட்சியில் இணைக்க தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, மு.க.தமிழரசு, செல்வி எனப் பலரும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் அழகிரி கொஞ்சம் இறங்கி வந்தாலும், ஸ்டாலின் தரப்பு அவரை ஒதுக்குவதிலேயே குறியாக இருந்தது. அதிலும், ஸ்டாலினை அவரது மனைவி துர்காவின் குடும்பத்தினரும், மருமகன் சபரீசன் தரப்பினரும் இயக்குவதாக அழகிரி தரப்பில் புகார் சொன்னார்கள். ஸ்டாலின் முதல்வராவதற்கு அழகிரி தடையாக இருப்பார், அதனால் அவரை கட்சியில் சேர்க்கவே கூடாது என்று ஸ்டாலின் மனைவி தரப்பில் தீவிரமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. 

இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல், திருப்பரங்குன்றம், ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் உட்பட அனைத்திலும் ஸ்டாலின் எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாகப்போனதாக அழகிரி தரப்பினர் விமர்சித்து வந்தனர். ```திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்தவர் என்று போற்றப்படும் அண்ணன் (மு.க.அழகிரி) மட்டும் கட்சியில் இருந்திருந்தால், பல சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்திருக்கும். அதுபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் காக்கா கூட்டமாக மாறிய அ.தி.மு.க-வை, ஆட்சியிலிருந்து அண்ணன் அப்புறப்படுத்தியிருப்பார், இந்நேரம் தென் மாவட்டங்களிலிருந்து பல அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களைத் தி.மு.க-வுக்குக் கொண்டு வந்திருப்பார். தானாக ஆட்சி கவிழும், அந்த இடைவெளியில் முதல்வராகலாம் என்று ஸ்டாலின் காத்திருப்பதுபோல் அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கமாட்டார் அண்ணன். இப்படி, கண்முன்னே கட்சி அழிகிறதே என்ற கவலையில்தான் அண்ணன் அவ்வப்போது அப்படிப் பேசுகிறார். அழகிரி ஏதோ கட்சிக்கு எந்தத் தியாகமும் செய்யாமல் வந்ததுபோலச் சித்திரிக்கிறார்கள். அவர், சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த பின்புதான் தென் மாவட்டத்தில் கட்சியைப் பலமாக வளர்த்தார். அவர் வந்தாலே அ.தி.மு.க-வினரும் அஞ்சும் வகையில் தி.மு.க-வை வளர்த்தார். இன்றைக்கு அவர் இருக்கும் மதுரையில் தி.மு.க. இருப்பதே தெரியவில்லை'' என்கிறார்கள் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள். 

ஸ்டாலின்

தி.மு.க-வில் இருக்கும் பொதுவானவர்கள் நம்மிடம் பேசும்போது, ``அழகிரி சொல்கிற அனைத்தையும் ஏற்க முடியாது என்றாலும், கட்சி அழிகிறது என்று சொல்வதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கட்சியினருடன் பழகுவதில் அழகிரிபோல் வராது. அதுபோல் கட்சி நிர்வாகி பாதிக்கப்பட்டால் அவரே வந்துவிடுவார். என்ன, அவர் அதிகாரத்தில் இருந்த நேரத்தில் அவருடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்களால் கெட்டபெயர் ஏற்பட்டது. குற்றப் பின்னணி உள்ளவர்களை அருகில் வைத்திருந்தார். அவர்களால் தனக்கும், கட்சிக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது என்பதைத் தெரியாமல் இருந்தார். அதன் காரணமாகவே, பி.டி.ஆர். போன்ற திராவிட பரம்பரை தலைவரைத் தோற்கடிக்க உதவி செய்தார்.

இதேபோல ஸ்டாலினும் கடந்த நாடளுமன்றத் தேர்தலில் கட்சி நிர்வாகிக்கு சீட் கொடுக்காமல், வியாபாரி ரத்தினவேலு, ஜலீல் போன்றவர்களுக்கு சீட் கொடுத்தார். தேர்தலில் அவர்கள் தோற்றதால், இப்போது தங்கள் தொழிலைப் பார்க்கப் போய்விட்டார்கள். இதேபோல் கட்சிக்காரர்களுக்குக் கொடுத்தால் சாகும்வரைக்கும் கட்சியில்தான் இருப்பார்கள். அதுபோல், ஸ்டாலின் அருகில் பல அதிகார மையங்கள் உருவாகியுள்ளன. `எதற்கெடுத்தாலும் சபரீசனைக் கேட்க வேண்டும்' அல்லது `அன்பில் மகேஷைப் பாருங்கள்' என்கிறார்கள். பெரிய தலைவர்களே இவர்களிடம்தாம் எதைப் பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது. அடிமட்டத் தொண்டர்களைப் பற்றி ஸ்டாலின் கவலைப்படுவதில்லை. இப்போதுள்ள சூழலில் சொந்த வெறுப்பு விருப்புகளை மறந்து ஸ்டாலினும், அழகிரியும் ஒன்றுசேர்ந்து தி.மு.க-வை வலுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவது கஷ்டம்'' என்கிறார்கள்.

```தற்போது கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறேன்' என்று நிர்வாகிகளை மாற்றி, ஸ்டாலின் அறிவித்ததும் கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்கிறார்கள். அதில் பதவியை எதிர்பார்த்தவர்கள், பதவியைப் பறிகொடுத்தவர்கள் அழகிரி பக்கம் ஒதுங்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம். இதைத் தெரிந்துகொண்டுதான் அழகிரி,``மெய்யான செயல்வீரர்கள் என்னிடம்தான் இருக்கிறார்கள். தி.மு.க.-வில் இப்போது இருக்கிறவர்கள் எல்லாம் பதவிக்காகத்தான் இருக்கிறார்கள்'' என்று பேசியதாகச் சொல்கிறார்கள். அழகிரியின் கருத்துக்கு ஸ்டாலின் இதுவரை பதில் சொல்லவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்