வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (07/07/2018)

கடைசி தொடர்பு:15:44 (07/07/2018)

`மூளைச் செயல்பாடு இல்லாதவர் மு.க.அழகிரி'- கடுகடுத்த ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை செயல்படாத தலைவர் என விமர்சனம் செய்த மு.க.அழகிரி, மூளைச் செயல் இழந்தவர் என தி.மு.க அமைப்புச் செயலளரான ஆர்.எஸ்.பாரதி காட்டமாகத் தெரிவித்தார். 

மு.க அழகிரி கண்டனம் - ஆர்.எஸ்.பாரதி

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தி.மு.க-வின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பிருமான ஆர்.எஸ்.பாரதி நெல்லைக்கு வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழகத்தில் பயங்கரவாதம் ஊடுருவி விட்டதாக மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அத்துடன், பா.ஜ.க தலைவர்கள் பலரும் இதே கருத்தையே தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டது உண்மை என்றால், உள்துறையை கையில் வைத்திருக்கும் மத்திய பா.ஜ. அரசு, உடனடியாக தமிழக அரசைக் கலைத்துவிட வேண்டியது தானே. தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன? தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தும் வருமான வரித்துறையினர் ஊழலில் ஈடுபடும் மாநில அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன? தமிழக அமைச்சர்களைக் கண்டு வருமான வரித்துறை அஞ்சுகிறதா?

தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்துக்கான முட்டை விநியோகத்தில் மட்டுமா ஊழல் நடக்கிறது. அனைத்துத் துறைகளிலும் அளவுக்கு அதிகமான ஊழல்கள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 8 வழிச்சாலைத் திட்டத்தை அமைக்கும் முன்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும்’’ என்றார். 

சமீபத்தில் பேசிய மு.க.அழகிரி, `செயல்படாத செயல் தலைவர் சென்னையில் இருக்கிறார். செயல்படக்கூடிய தொண்டர்கள் அனைவருமே என்னுடன் இருக்கிறார்கள்’ எனப் பேசியது குறித்து ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டதற்கு, ``அவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் நலனுக்காக சிறப்பாகச் செயல்பட்டு வரக்கூடிய மு.க.ஸ்டாலினை செயல்படாத தலைவர் என வர்ணிக்கும் மு.க.அழகிரி மூளைச் செயல் இழந்தவர்’’ எனக் காட்டமாகத் தெரிவித்தார்.