50 செல்போன்கள், நகை, பணம் திருட்டு! - தினகரன் ஆர்ப்பாட்டத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

பசுமைச் சாலைக்கு எதிராக, திருவண்ணாமலையில் டி.டி.வி.தினகரன் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோரின் செல்போன் மற்றும் நகை பணம் திருடப்பட்டுள்ளது. 

டி.டி.வி.தினகரன்

சென்னை - சேலம் பசுமைச் வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.ம.மு.க. சார்பில் நேற்று மாலை திருவண்ணாமலை அண்ணாசிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அ.ம.மு.க கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தொண்டர்களும் மற்றும் பசுமைச் சாலை மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் என 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுத்துவிட்டு, போதிய பாதுகாப்பு வசதி செய்து தராததால், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பிட்பாக்கெட் திருடர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கைவரிசையைக் காட்டிவிட்டனர்.

டி.டி.வி.தினகரன்

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பணத்தைப் பறிகொடுத்தவர்களிடம் பேசினோம். ``எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு டி.டி.வி.தினகரன் வராரு. நம்ம கட்சிக்காரர்கள் எல்லோரும் வந்திடணும். கண்டன ஆர்ப்பட்டத்தைச் சிறப்பா நடத்தி முடிக்கணும்'னு, தலைவரு சொல்லி இருக்காரு என்று மாவட்டச் செயலாளர் எங்களிடம் கூறி அவசியம் கலந்துக்கணும்'னு சொன்னாரு. நாங்களும் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் வாகனத்தை வாடகைக்கு எடுத்துகிட்டு வந்தோம். ஆர்ப்பாட்டம் ஆரம்பிச்சதும் டி.டி.வி. பேசும்போது எல்லோரும் ஆவேசமாக கோஷம் போட்டுக்கிட்டு பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிச்சோம். இரவு 7 மணி ஆகும் போதெல்லாம் அண்ணாசிலை பகுதியில் லைட் வெளிச்சமே இல்ல. அந்தச் சமயம் பார்த்து பிட்பாக்கெட் திருடர்கள் உள் நுழைந்து எங்க பணம் மற்றும் நகைகள் எல்லாம் ஆட்டையப்போட்டுச் சென்றுள்ளனர். ஆனால், இது எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. கடைசியாக போராட்டம் முடிந்ததும் டீ குடிக்கலாம் என்று பாக்கெட்டில் கைவிடும்போதுதான் தெரிஞ்சது திருடு போனது பற்றி. 50-க்கும் மேற்பட்டவர் பாக்கெட்கள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை டவுன் போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை. பிக்பாக்கெட் அடித்தவர்கள் என்று இரண்டு பேரை கைது செய்துள்ளார்கள். அவர்களைப் பார்த்தால் அப்பாவியாக தெரிகிறது. உண்மையான குற்றவாளிகளைக் கண்டு அவர்களைக் கைது செய்ய வேண்டும். இந்தத் திருட்டுக்கு முக்கிய காரணம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்காததுதான்'' என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!