வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (07/07/2018)

கடைசி தொடர்பு:17:40 (07/07/2018)

`மாலை அணிவித்து, இனிப்பு ஊட்டி..!'  - குற்றவாளிகளை வரவேற்ற மத்திய அமைச்சர் 

பசுவதை செய்த குற்றத்துக்காக இறைச்சி வியாபாரியைக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்களுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி உள்ளார் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. 

 ஜெயந்த் சின்ஹா

ஜார்க்கண்ட் மாநிலம் ஹாசாரிபாக் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. இவர், விமானப் போக்குவரத்து இணையமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், இவரது தொகுதிக்கு உட்பட்ட ராம்கர் நகரில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதியன்று மாட்டிறைச்சியை விற்ற காரணத்துக்காக அலீமுதீன் என்ற வியாபாரியைத் தடுத்து நிறுத்திய கும்பல் சரமாரியாகத் தாக்கிக் கொன்றது. இந்தச் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார், பா.ஜ.க பிரமுகர் உட்பட 11 பேரைக் கைது செய்தனர். வழக்கை விசாரித்த ராம்கர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. 

இனிப்பு ஊட்டும் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா

இந்தத் தண்டனையை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதில், 8 பேரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீன் பெற்ற 8 பேரும் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை நேரில் சந்தித்தனர். அவர்களை வரவேற்ற அமைச்சர், மாலை அணிவித்து இனிப்பு பலகாரத்தை ஊட்டியிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மத்திய இணை அமைச்சரின் இந்தச் செயலுக்குக் கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது. `நான் எந்த கலவரங்களுக்கும் ஆதரவானவன் அல்ல. அரசியல் சாசனத்தின்படி ஜனநாயகத்தில் சட்டம் மட்டும்தான் முதன்மை பெற வேண்டும்' என விளக்கம் அளித்திருக்கிறார் ஜெயந்த் சின்ஹா.