"எங்க ஆசிரியரை மறுபடியும் பள்ளியில் பணியமர்த்தணும்!" - போராடும் மாணவர்கள்!

கடவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி

'இட மாறுதலில் செல்ல இருந்த ஆசிரியரை மறுபடியும் எங்கள் பள்ளியிலேயே நியமிக்கணும்' என்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் பகவானை பணிமாறுதலில் போகவிடாமல் மாணவர்கள் நடத்திய போராட்டம் வைரலானது. இந்நிலையில், கரூர் மாவட்டத்திலும்  ஓர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரை மறுபடியும் அந்தப் பள்ளியிலேயே நியமிக்குமாறு, அந்தப் பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்து போராடிவருகிறார்கள்.

கரூர் மாவட்டம், கடவூரில் இருக்கிறது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் வடிவேல். இவர், பள்ளி மாணவர்களோடு இணக்கமாகச் செயல்பட்டதோடு,10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக தேர்ச்சி விகிதத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதோடு, பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடக்கும்போது, தனது சொந்தச் செலவில் வாகனம், உணவு என்று மாணவர்களுக்கு உதவிசெய்துள்ளார். இந்தச் சூழலில்தான், இவரைப் பிடிக்காத சக ஆசிரியர் ஒருவர், இவர்மீது திருட்டுப்பழி சுமத்தி ,தலைமை ஆசிரியர் வடிவேல் மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்ததாக மாணவர்கள் புலம்புகிறார்கள்.

இதுபற்றி மாணவர்களிடம் பேசினோம். "வடிவேல் சார் எங்க மேல அவ்வளவு பிரியமா இருந்தார். எங்களுக்குப் பல்வேறு வகையில் உதவிகள் செய்தார். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் படிப்பு மேம்படணும் என்பதற்காக, எல்லா ஆசிரியர்களையும் கூடுதலா வேலைவாங்குவார். ஆனால், அதைப் பிடிக்காத சக ஆசிரியர் ஒருவர், இவர்மீது திருட்டுப்பழி சுமத்திட்டார். ஒரு மாதத்துக்கு முன்பு மாணவர்களுக்கு வழங்க இருந்த லேப்டாப்-களில் ஒன்றைக் காணவில்லை. 'அதை வடிவேல் சார்தான் எடுத்துவிட்டார்' என்று இதே பள்ளியில் வேலைபார்க்கும் சக ஆசிரிய,ர் மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிகளுக்குப் புகார் கொடுத்துட்டார். உடனே, சி.இ.ஓ என்ன ஏதுனு விசாரிக்காம, வடிவேல் சாரை சஸ்பெண்ட் பண்ணிட்டதா சொல்றாங்க. வேறு பள்ளிக்கு அவரை டிரான்ஸ்ஃபர் பண்ணப் போறதா சொல்றாங்க. ஒரு மாசமா அவர் பள்ளிக்கு வரலை. இதனால், நாங்க ரொம்ப நொந்து போயிருக்கிறோம். பள்ளிக்கூடம், அவர் இருந்தப்ப இருந்ததுபோல  இல்லை. அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது பொய்க்குற்றச்சாட்டு. அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அதிகாரிகள் வாபஸ் வாங்கணும். அவரை மறுபடியும் இதே பள்ளியில் பணியில் அமர்த்தணும். இல்லைனா, வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்துவோம்" என்றார்கள் ஆக்ரோஷமாக.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!