"தண்ணீர்ப் பிரச்னையால் 8 வருஷமா அரசு மாணவர் விடுதியைத் திறக்கலை!" - புலம்பும் மாணவர்கள்! | Government hostel closed for eight years over water problem, alleges students

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (07/07/2018)

கடைசி தொடர்பு:18:20 (07/07/2018)

"தண்ணீர்ப் பிரச்னையால் 8 வருஷமா அரசு மாணவர் விடுதியைத் திறக்கலை!" - புலம்பும் மாணவர்கள்!

"தண்ணீர்ப் பிரச்னையால் எட்டு ஆண்டுகளாக அரசு மாணவர் விடுதியைத் திறக்காமல் பூட்டிவைத்திருக்கிறார்கள். இதனால், நாங்க தங்க முடியாம அல்லாடிவருகிறோம்" என்று புழுங்குகிறார்கள் மாணவர்கள்.

 அரசு தொழில்நுட்பக் கல்லூரி

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள காணியாளம்பட்டியில், கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது அரசு தொழில்நுட்பக் கல்லூரி. இந்தக் கல்லூரியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதுவரை கல்வி பயின்றுள்ளனர். இப்போது, 800 மாணவர்கள் கல்வி பயின்றுவருகிறார்கள். கடந்த 2010-ம் ஆண்டு, இந்தத் தொழில்நுட்பக் கல்லூரி இங்கு தொடங்கியபோதே, அரசு மாணவர் விடுதியையும் அமைத்தனர். ஆனால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் 1200 அடிக்குக் கீழ் இருந்ததால்,போதிய தண்ணீர் வசதி இல்லை என்று சொல்லி, இந்த விடுதியைத் திறக்காமலேயே  எட்டு வருடங்களாக பூட்டிவைத்திருக்கிறார்கள். இதுதான் மாணவர்களைக் குமுறவைத்துள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய மாணவர்கள், "இது, மிகவும் பின்தங்கிய பகுதி. நாங்க எல்லோரும் ஏழ்மையானவர்கள். நாங்க 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள தோகைமலை, குளித்தலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம்னு பல பகுதிகளிலிருந்து வந்து படிக்கிறோம். அதோடு, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். இங்கு தங்கிப் படிக்க மாணவர் விடுதி இருக்கும்னு நம்பிதான் இங்க வந்து சேர்ந்தோம். ஆனால், 'தண்ணீர் வசதி இல்லை' என்று சொல்லி, கடந்த எட்டு வருடங்களாக இந்த மாணவர் விடுதியை மூடியே வச்சிருக்காங்க. 'இந்த மாணவர் விடுதியைத் திறங்க'ன்னு பலதடவை போராட்டம் நடத்திட்டோம்.

கரூர் மாவட்ட கலெக்டர்களிடம் தொடர்ந்து மனு கொடுத்துட்டுவர்றோம். முன்பிருந்த கலெக்டர் கோவிந்தராஜ், நேரடியாக மாணவர் விடுதிக்கு விசிட் அடித்ததோடு, 'இங்கே தண்ணீர் பிரச்னையை தீர்த்து, விடுதியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கிறேன்'ன்னு உறுதி கொடுத்தார். ஆனால், அவரோட வாக்குறுதி காத்தோட காத்தா போயிட்டு. விடுதி மூடிக்கிடப்பதால், வெளிமாவட்ட மாணவர்களும், தூரத்தில் இருந்து வரும் மாணவர்களும் மாதம் 6000 வரை செலவு செய்து, தனியாக வாடகை ரூம்களில் தங்க வேண்டியுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள எங்க பெற்றோர்கள், மாதம் 6000 ரூபாய் கொடுக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். இப்போதைய கலெக்டர் அன்பழகனாவது எங்க கோரிக்கையை உடனே நிறைவேற்றணும். இல்லைனா, போராட்டத்தில் குதிப்போம்" என்றார்கள்.