வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (07/07/2018)

கடைசி தொடர்பு:18:40 (07/07/2018)

`கொள்ளிடம் ஆற்றின் அருகே 1000 அடிக்குக் கீழேயும் தண்ணீர் இல்லை'- ஆய்வுசெய்த வல்லுநர்கள் அதிர்ச்சி

``கொள்ளிடம் ஆற்றின் அருகே 1000 அடிக்கும் கீழே தண்ணீர் இல்லை'' என்று ஆய்வுசெய்த வல்லுநர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றிலிருந்துதான் பல மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம்மூலம் தண்ணீர் செல்கிறது. ஆனால், கொள்ளிடம் ஆற்றின் அருகேயுள்ள கடலோரக் கிராமங்களில், 1000 அடிக்குக் கீழேயும் தண்ணீர் இல்லை என்ற ஆய்வின் முடிவால், இப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  குடிநீர் இல்லை என்ற 20-க்கும் மேற்பட்ட கடலோரக் கிராம மக்கள், தொடர்ந்து தந்த புகாரின்படி, கடலூரிலிருந்து புவியியல் வல்லுநர்கள் இக்கிராமங்களுக்கு வந்து ஆய்வுசெய்தனர்.  

புவியியல் வல்லுநர்கள்

 வல்லுநர்களுடன் பேசியபோது, ``இதுநாள் வரை இக்கிராமங்களில் 20 அடி முதல் 40 அடி வரை உள்ள ஆழத்திலேயே நிலத்தடி நீர் கிடைத்தது.  கடந்த சில ஆண்டுகளில் மழை இல்லாததாலும், மேட்டூரிலிருந்து காவிரியில் போதிய நீர்வரத்து குறைந்ததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோய்விட்டது.  தற்போது, 1000 அடிக்குள் தண்ணீர் கிடைக்குமா? என்று ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில், தண்ணீர் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது'' என்றனர்.

இதனால், பல மாவட்டங்களுக்கு நீர் வழங்கும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரக் கிராமங்களில் குடிநீர் இல்லை என்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.