"என் நிலத்தைக் கொடுக்க மாட்டேன்’னு மக்கள் சொல்லக் கூடாதா..?!’’ ’சேலம்’ வளர்மதி | Activist valarmathi talks about salem chennai expressway project

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (07/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (07/07/2018)

"என் நிலத்தைக் கொடுக்க மாட்டேன்’னு மக்கள் சொல்லக் கூடாதா..?!’’ ’சேலம்’ வளர்மதி

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை வழக்குகளிலிருந்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் 17 நாள்கள் சிறைவாசத்திலிருந்து வெளியே வந்தார் வளர்மதி. அவருடன் பேசினோம். 

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராகப் போராட பொதுமக்களைத் தூண்டியதாக கடந்த மாதம் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார் சமூகச் செயற்பாட்டாளர் வளர்மதி. சென்னையில் திரைப்பட விழாவில் பேசிய பேச்சுக்காக இன்னொரு வழக்கும் பதியப்பட்டது. நீதி மன்றத்தில் இவ்வழக்குகளிலிருந்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் 17 நாள்கள் சிறைவாசத்திலிருந்து வெளியே வந்தார் வளர்மதி. அவருடன் பேசினோம். 

வளர்மதி

``கைது செய்த அன்றைக்கு என்ன நடந்துச்சு?"

``சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிராக, பல இடங்களில் மக்கள் போராடுறாங்க. அப்படித்தான் ஆச்சாங்குட்டப்பட்டியிலேயும் வயதான அம்மாவை ஏகப்பட்ட போலீஸ்காரங்க அழைச்சிட்டு போறதை நீங்க பார்த்திருப்பீங்க இல்லையா! அந்த ஊருக்குப் போய், மக்கள்கிட்ட ஐந்து நிமிடங்கள் பேசினேன். அதுக்குள்ள வந்து கைது பண்ணிட்டாங்க. அப்பறம் வழக்கம்போலதான். வளர்மதி வெளியே போனா இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடிட்டே இருப்பாங்க. அதனால இந்தத் திட்டம் முடியவரைக்கும் ஜாமின் கொடுக்கக் கூடாதுனு அரசுத் தரப்பில் சொன்னாங்க. பிறகு, மாவட்ட நீதிமன்றத்துக்குப் போய் நிபந்தனை ஜாமீன் வாங்கியிருக்கோம். தினமும் காவல் நிலையம் போய் கையெழுத்துப் போடணும்"

வளர்மதி

``இந்தத் திட்டத்தைப் பெரும்பான்மையான மக்கள் ஆதரிப்பதாகவும் மிகக்குறைவான சிலரே எதிர்ப்பதாகவும் அரசுத் தரப்பில் சொல்லப்படுதே?"

``அது வடிகட்டின பொய். பொதுமக்களிடமே போய் விசாரிங்க. ஒரு சதவிகிதத்தினர்கூட இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இல்ல. எங்க ஊர்ல இருக்கிற வயசானவங்ககூட `யார் இந்த ரோட்டைக் கேட்டா?'னுதான் சொல்றாங்க. தங்களுடைய நிலத்தைக் கொடுக்கமாட்டேனு சொல்ற உரிமைகூடவா மக்களுக்கு இல்ல. இந்தத் திட்டம் மக்களோட வளர்ச்சிக்காகவா கொண்டுவரப்படுது. கஞ்சமலை உட்பட எட்டு மலைகள்ல உள்ள தாதுபொருள்களை எடுக்கிறதுக்காகத்தானே! இது இங்கே இருக்குற பச்சைக்குழந்தைக்குக்கூட தெரியுமே! நீரையும் நிலத்தையும் மலைகளையும் அழிச்சிட்டா மக்கள் எதை வெச்சி வாழ முடியும் என்பதுதானே எங்களோட அடிப்படையான கேள்வி. இதெல்லாம் அடுத்த தலைமுறை தவிக்கக் கூடாதுன்னு என்பதுக்காகச் சொல்லல, இந்தத் தலைமுறையே தண்ணீர் கிடைக்காம தவிச்சி நிக்கும். இந்த விஷயம் அப்பட்டமாக எல்லோருக்கும் தெரிகிறது. அப்புறம் இன்னொரு விஷயம், சேலத்திலிருந்து சென்னைக்கு மூணு மணிநேரத்துல போய்டலாம்னு அரசு சொல்லுது. அதாவது சென்னையோட அவுட்டருக்குத்தான் அதுவும் போகமுடியும். அங்கிருந்து சிட்டிக்குள்ள போக இரண்டு, மூணு மணி நேரமாகும். 270 கிலோமீட்டரை மூணு மணிநேரத்துல போய்விடலாம்னா அப்ப வாகனங்கள் மணிக்கு நூறு கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்துல போகணும். அப்படின்னா, போக்குவரத்து விதிகள் என்னவாகும்? உளூந்தூர் பேட்டை வழியாக சென்னை - சேலம் செல்லும் வழியை விட சில கிலோமீட்டர்களே எட்டு வழிப்பாதை குறையும்ன்னா... இந்த வழியையே சரி செய்யலாமே? ரயில்ல அஞ்சு மணிநேரத்தில் போய்விடலாமே? கூடுதல் ரயில்களை விடலாமே? ஏழை மக்களுக்கு உதவணும்னு நினைச்சா, அன் ரிசர்வ்டு பெட்டிகளை அதிகரிக்கலாமே? அரசு என்ன சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என நினைக்கிறார்களா என்ன?"

வளர்மதி ``சேலம் மாவட்ட ஆட்சியரிடம் சில பொதுமக்கள் விருப்பத்துடன் தங்கள் இடங்களை வழங்குவதாகச் செய்திகள் வருகிறதே?" 

``கலெக்டர் ரோகிணி, மக்களின் குறைகளைக் கேட்கவே இல்லை. மக்கள் தங்களை வறுத்துக்கிட்டு போராடிட்டு இருக்காங்க. அவங்கள்ல யாரைப் போய் இவங்க சந்திச்சாங்க? இவருக்கு அரசுத் தரப்பிலிருந்து பிரபல விளம்பரம் தரப்படுதுன்னு சந்தேகம் இருக்கு! மக்களின் குரலாக ஒலிச்ச சகாயம் ஐ.ஏ.எஸ்ஸை இந்த அரசாங்கம் ஓர் ஓரத்துல ஒதுக்கி வெச்சிடுச்சு. ஆனா, இவருக்கு அளவுக்கு மீறி விளம்பரம் தந்து அவர் சொல்வதை மக்களோட குரலா மாற்ற முயற்சி செய்யறாங்களோன்னு நினைக்கிறேன்."

``திட்டமே வேண்டாம் என்பதிலிருந்து நிலங்களுக்கு இழப்பீடு அதிகரித்துத் தர வேண்டும் என்பதாக மாறுகிறதா?"

``மக்கள் அப்படி நினைக்கல. சில சந்தர்ப்பவாதிகள் அப்படி மாத்தணும்னு நினைக்கிறாங்க. ஒருவேளை மக்களே அந்த முடிவு எடுத்தாலும் அது தவறான முடிவுதான். ஏன்னா, கதிராமங்கலத்துல இப்போ போய் கேட்டீங்கன்னா, `ஊர் வளர்ச்சியாகும்னு சொன்னாங்க, அதுக்காக ஓ.என்.ஜி.சி.க்கு நிலத்தைக் கொடுத்தோம்னு சொல்வாங்க. ஆனா, இத்தனை வருஷம் கழிச்சுதான் அதன் பாதிப்பை உணர்ந்து போராடுறாங்க. இந்த நிலமை இங்கேயேயும் வந்துடக் கூடாது. தொடக்கத்திலேயே நாம் முழிச்சுக்கணும்" 

``இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வாக இருக்குமென நினைக்கிறீர்கள்?"

``எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கும் எல்லோரும் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டும். ஒரு சிலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனாலும், அதையெல்லாம் ஒதுக்கி வெச்சிட்டு ஒன்றாக நிற்கும்போதே வலு கூடும். அப்படி நிற்கலைன்னா, மக்களுக்கான வேலைகளைச் செய்யறோம் என்பதில் அர்த்தம் இல்ல."


டிரெண்டிங் @ விகடன்