`எங்கு வேண்டுமானாலும் போங்க; உத்தரவு போடாதீங்க'- கிரண்பேடியைக் கலாய்த்த நாராயணசாமி

வெளி மாநிலங்களுக்குச் சென்று ‘நீட்’ தேர்வெழுதிய 304 புதுச்சேரி மாணவர்களுக்குப் பயணத் தொகையை அளித்தார் முதல்வர் நாராயணசாமி.

நாராயணசாமி

புதுச்சேரியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களுக்கான பயணப்படி தலா 1,500 ரூபாயை 304 மாணவர்களுக்கு, 5,16,000 ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் நாராயணசாமி கல்வித்துறை இயக்குநரிடம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாராளுமன்றத்துக்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதென்பது சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல நடைமுறைக்கும் ஏற்றதல்ல என்று ஏற்கெனவே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். புதுச்சேரி அரசு சார்பிலும், காங்கிரஸ் கட்சி சார்பிலும் இதை எதிர்க்கிறோம். இது தொடர்பாக, மத்திய சட்டத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

நேற்றைய தினம் புதுச்சேரிக்கு வருகைதந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவிடம், புதுச்சேரியை 15-வது மத்திய நிதி கமிஷனில் சேர்ப்பது தொடர்பாகப் பேசினேன். அதற்கு, நிதி கமிஷன் ஆணையரை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்கப்பதாக அவர் உறுதியளித்திருக்கிறார். அதேபோல, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதற்காக, பல்கலைக்கழகத் துணைவேந்தரை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்று அவர் உறுதியளித்திருக்கிறார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மாநிலத்தின் பல இடங்களைச் சென்று பார்க்கலாம். அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது. கிரண்பேடி தன்னுடைய கருத்தை அமைச்சர்களுக்குத் தெரிவிக்கலாம். ஆனால், அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் அமைச்சர்களுக்கு உரிமை உண்டு. மேலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்மீது கிரண்பேடி தன்னுடைய கருத்தை திணிக்கக் கூடாது. கிரண்பேடியின் செயல்பாட்டைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். தேவைப்பட்டால், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனைபெற்று, நீதிமன்றத்தை அணுகுவோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!