வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (07/07/2018)

ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரை ஏன் திறக்கவில்லை?- ஆணையத்துக்கு பெ.மணியரசன் கேள்வி

ஜூலை 2-ம் தேதி, டெல்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதம் கொடுக்க வேண்டிய பங்கு நீரான 31.25 டி.எம்.சி-யை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவரும், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் கேள்வி எழுப்பினார்.

மணியரசன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்,‘’டெல்லியில் நேற்று கூடிய ஒழுங்காற்றுக் குழு, தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதத்துக்கு தரவேண்டிய 31.25 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட, கர்நாடகம் எந்த ஒரு ஏற்பாடும் செய்யவில்லை. புள்ளிவிவரங்கள் தொடர்பாக, 4 மாநிலங்களும் படிவங்களை நிரப்பச் சொல்லிவிட்டு கலைந்திருக்கிறது. இது ஏமாற்றத்தை தருகிறது. கர்நாடகாவில் வழக்கத்தைவிட தற்போது அதிகமாக மழைபெய்து, அம்மாநில அணைகளில் 90 சதவிகத்துக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையிலும்கூட தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லையென்றால், காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு என்பதெல்லாம் வெறும் பொம்மை அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது. ஜூலை 2-ம் தேதி நடைபெற்ற காவிரி ஆணைய கூட்டத்தில், ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்ட உத்தரவு, வழக்கம்போல வெறும் ஏட்டுச்சுரைகாய்தானா? காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, கர்நாடகம் ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரைத் திறந்துவிட மத்திய அரசு உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.