வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (07/07/2018)

கடைசி தொடர்பு:20:30 (07/07/2018)

குற்றால அருவிகளில் குறைந்துவிட்டது தண்ணீர்... அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்

குற்றால அருவிகளில் குறைவான அளவிலேயே தண்ணீர் விழுவதால், கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் அருவி

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. குற்றாலத்தில் சாரல் இல்லாததால் வெயில் வாட்டுகிறது. காற்று மட்டும் வேகமாக வீசிவருகிறது. அதனால், அருவிகளில் தண்ணீர் குறைந்துவிட்டது. வார விடுமுறை காரணமாக இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தபடியே இருக்கிறது. அதனால், சாலைகளில் வாகன நெருக்கடி அதிகமாக இருக்கிறது. 

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் குறைந்துவிட்ட நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிகள் குளித்து மகிழ்கிறார்கள். பெண்கள் பகுதியிலும் கூட்டம் அலைமோதுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் மட்டும் தண்ணீர் கொட்டுகிறது. அதிலும், இரு பிரிவுகளில் மட்டுமே தண்ணீர் அதிகமாக விழுவதால் அங்கும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கூட்டத்தினரை போலீஸார் கட்டுப்படுத்தி  வருகிறார்கள். 

பழைய குற்றாலம் அருவியிலும் கூட்டம் அலைமோதிய போதிலும், தண்ணீர் குறைவாகவே விழுகிறது. புலியருவியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.  கூட்டம் அதிகமாக இருப்பதால், வெளியூர்களில் இருந்து காரில் வருபவர்கள், குண்டாறு நீர்த்தேக்கத்துக்குச் சென்று, அங்குள்ள தனியார் தோட்டங்களில் விழக்கூடிய அருவிகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் குளித்து மகிழ்கிறார்கள். கேரள எல்லைப் பகுதியில் உள்ள கும்பாவுருட்டி, பாலருவி ஆகியவற்றிலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், வரிசையில் நின்று குளிக்கவேண்டிய நிலை இருக்கிறது.