வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (07/07/2018)

கடைசி தொடர்பு:18:01 (07/07/2018)

ஒரே தேசம், ஒரே தேர்தல் கொள்கையை அ.தி.மு.க எதிர்க்கும்..! தம்பிதுரை உறுதி

'நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது என்பதுதான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு' என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தம்பிதுரை

நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4,000 கோடியும்  சட்டமன்றங்களுக்கு மாநில வாரியாக 300 கோடியும் செலவாகிறது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், மொத்தமாகவே 4,500 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுகுறித்து கருத்து கேட்க  7 தேசியக் கட்சிகள் மற்றும் 59 மாநிலக் கட்சிகளுக்கு, மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. அதன்படி, இன்று டெல்லியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின் பேசிய அ.தி.மு.க எம்.பி., தம்பிதுரை, 'நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது என்பதுதான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு முன்பாக, பொதுமக்களின் கருத்தையும் அறிந்துகொள்ள வேண்டும்.    5 ஆண்டுகளுக்கு என்று தேர்ந்தெடுக்கும்போது, அதைக் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலத்தில் யாருக்கு ஆட்சி. மத்தியில் யாருக்கு ஆட்சி என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் அ.தி.மு.க ஆதரிக்கவில்லை' என்று தெரிவித்தார்.