`நீ தான் என் உத்வேகம் பென்'- சிகிச்சைபெறும் சிறுவனுக்காக ஹேரிகேன் உருக்கமான ட்வீட்

மூளைக் கட்டியால் சிகிச்சைபெற்றுவரும் சிறுவனுக்கு மாதிரி உலகக் கோப்பை பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை

Photo Credit: Twitter/@LiamHerbert

இங்கிலாந்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பென், மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். சிகிச்சைக்கு முன்பு இவரால் நடக்கவும் பேசவும் இயலாது. 6 வார சிகிச்சைக்குப் பிறகு தற்போது பேசவும், நடக்கவும் செய்கிறான். கடந்த சில தினங்களுக்கு முன் பென் ஒரு வேண்டுகோள் வைத்தார். தனக்கு உலகக் கோப்பை வேண்டும் என அவரது ஆசையை வெளிப்படுத்தினார். இதையடுத்து, உலகக் கோப்பை ஒன்றைப் பரிசளிக்க முடிவு செய்த மருத்துவமனை நிர்வாகம், சிறுவனுக்காக அவர் அனுமதிக்கப்பட்ட அறையை உலகக் கோப்பை விழாக்கோலம்போன்று வடிவமைத்தது. 

பக்கத்து அறையிலிருந்து சிறுவன் வரவழைக்கப்பட்டான். செவிலியர்கள் சிலர் இங்கிலாந்து அணியின் கொடியைப் போர்த்தியிருந்தனர். அங்கிருந்து சேரில் ஒரு கிஃப்ட் கவரில் உலகக் கோப்பை வைக்கப்பட்டிருந்தது. ஒன்றும் புரியாத சிறுவன் அதைத் திறந்து பார்த்தான்.  உலகக் கோப்பை போன்ற மாதிரியைக் கண்டதும் சிறுவனின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. அதைக் கையில் எடுத்து அணைத்துக்கொண்டான். இந்தக் காட்சிகள் அனைத்தையும் வீடியோ எடுத்த மருத்துவர் அதனை ட்விட்டரில் பதிவேற்றினார். பிறகு,  இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹேரிகேனுக்கு டேக் செய்துள்ளார். இதில், ``பென் எங்களிடம் உலகக் கோப்பை கேட்டான் வாங்கிக் கொடுத்துவிட்டோம். ஹேரிகேன் நீங்களும் செய்வீர்களா?” எனக் கேட்டுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு ஹேரிகேன் பதிலளித்துள்ளார். ஹாய் பென்!, நான் உன்னுடைய வீடியோவைப் பார்த்தேன். நீ தான் எனக்கு உத்வேகம். சனிக்கிழமையன்று உன் முகத்தில் புன்னகையை ஏற்படுத்த நாங்கள் அனைத்தையும் செய்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!