வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (07/07/2018)

கடைசி தொடர்பு:18:33 (07/07/2018)

`அடையாளம் தெரியாத பேய்’ - குஜராத் போலீஸ் பதிவுசெய்த நூதன வழக்கு

குஜராத் மாநில போலீஸார், ’அடையாளம் தெரியாத பேய்’ மீது வழக்குப்பதிவு செய்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியின் பெயருக்கான இடத்தில் பேய் என்றே குறிப்பிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

அடையாளம் தெரியாத பேய் மீது வழக்கு

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யும்போது, குற்றவாளி யார் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், ’அடையாளம் தெரியாத நபர்’ எனக் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், குஜராத் மாநில போலீஸார், பேய்மீது வழக்குப்பதிவு செய்து சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார்கள். வதோரா மாவட்டத்தில் இந்த விநோதச் சம்பவம் நடந்திருக்கிறது. பத்ரா தாலுகாவுக்கு உட்பட்ட சோக்கரி என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. 

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மனிஷா பாதியார் என்ற பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அவரை உறவினர்களும் ஊர்க்காரர்களும் சேர்ந்து காப்பாற்றினார்கள். உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அவரை வதோராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். காவல்துறையினர், அவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். 

அப்போது, மனிஷா பாதியார் கூறுகையில், ’நான் வீட்டில் இருந்தபோது, ஒரு பேய் வந்து என்னை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றும்படி கேட்டுக்கொண்டது. அதைக் கேட்டதும், நான்  மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டேன். பின்னர், தீயைப் பற்றவைக்குமாறு சொன்னதால்,  பற்றவைத்தேன். பேய் சொன்னபடியே நான் செய்துகொண்டேன்’ எனத் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தை கவனமாகக் கேட்டு குறிப்பெடுத்த போலீஸார், எஃப் ஐஆர் பதிவு செய்தபோது, மறக்காமல் குற்றவாளி என்ற இடத்தில் ‘அடையாளம் தெரியாத பேய்’ எனக் குறிப்பிட்டார்கள். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு உதவியாக இருந்துவரும் உறவினர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு, ’பேய் சொன்னதைக் கேட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டேன்’ என்று மனிஷா தெரிவித்ததாகக் கூறினார்கள். பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரதீபன் என்பவர் கூறுகையில், ’’அவர் எந்தப் பேயைச் சொல்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், பேய் சொன்னதைக் கேட்டுத்தான் இப்படிச் செய்ததாக எங்களிடமும் தெரிவித்தார். புரிந்துகொள்ளவே முடியவில்லை’ என்றார். இந்தச் சம்பவம் குஜராத் முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க அந்த மாநில காவல்துறை மறுத்துவிட்டது.