டிராஃபிக் ராமசாமியை கூல் பண்ணிய அ.தி.மு.க எம்.எல்.ஏ.

மதுரையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏவை வாழ்த்தி அவர் அலுவலகத்துக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் பேனரை அகற்றச் சொல்லி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த டிராஃபிக் ராமசாமியை எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா நேரில் வந்து சமாதானப்படுத்தி பேனரை அகற்றியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. 

ராஜன் செல்லப்பா - டிராஃபிக் ராமசாமி

அ.தி.மு.கவின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், வடக்குத் தொகுதி எம்.எல்.ஏவுமான ராஜன்செல்லப்பா அலுவலகம் அழகர் கோயில் சாலையில் அமைந்துள்ளது. அதன் எதிரே அவரை வாழ்த்தி அ.தி.மு.கவினர் ஃபிளெக்ஸ் பேனர் வைத்திருந்தனர். இந்தநிலையில் இன்று மதுரை வந்திருந்த டிராஃபிக் ராமசாமி, அந்த வழியாகச் செல்லும்போது ஃபிளெக்ஸைப் பார்த்து விட்டார். உடனே, அதை செல்போனில் படமெடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி, இதற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?,  இதை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். இதை எம்.எல்.ஏ, அலுவலகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கட்சியினர், டிராஃபிக் ராமசாமியை எதிர்த்து கோஷமிட்டபடி முற்றுகையிட்டனர். உடனே காவல்துறையினர் அங்கு வந்துவிட்டனர்.

ராஜன் செல்லப்பா

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் கேள்விப்பட்டு ராஜன்செல்லப்பா உடனே வந்துவிட்டார். அவரே டிராஃபிக் ராமசாமியிடம் சென்று, `கட்சியினர் வைத்துவிட்டார்கள், நான் அதை அப்புறப்படுத்தச் சொல்கிறேன்' என்று சொல்ல டிராஃபிக் ராமசாமி அமைதியானார். அதன் பின்னர் பேனர் அகற்றப்பட்டது. `என் அலுவலகத்துக்கு வந்து காப்பி சாப்பிட்டுச் செல்லுங்கள் சார்' என்று அழைத்தார். அதற்கு சிரித்தபடி நன்றி தெரிவித்துவிட்டு டிராஃபிக் ராமசாமி கிளம்பினார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!