ம.தி.மு.க நகரச் செயலாளருக்கு அரிவாள் வெட்டு! - காரைக்குடியில் பரபரப்பு

நிலத்தகராறில், காரைக்குடி ம.தி.மு.க நகரச் செயலாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தியாகராஜன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை ரோட்டில் சிற்பக் கூடம் வைத்திருக்கிறார், தியாகராஜன். சிற்பக் கூடம் வைத்திருப்பதாலேயே, இவர் பெயருக்கு முன் சிற்பி.தியாகராஜன் என சேர்த்துக்கொண்டார் என்கிறார்கள் அப்பகுதிவாசிகள். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு,  இவருடைய சித்தப்பா மனைவி பாப்பாத்தியம்மாளிடம் சிற்பக் கூடத்துக்கான இடத்தை கிரையமாக வாங்கியிருக்கிறார். இவர், அந்த இடத்தையும் சேர்த்து இத்தனை ஆண்டு காலமாகத் தனது சிற்பக் கலைக்கூடத்தை நடத்திவருகிறார். இவர், ம.தி.மு.க-வின் காரைக்குடி நகரச் செயலாளராகவும் இருந்துவருகிறார்.

இந்த நிலையில், பாப்பாத்தியம்மாளின் மகன் சுப்பிரமணி, தன் அம்மாவை ஏமாற்றி சிற்பி.தியாகராஜன் சொத்தை எழுதி வாங்கிவிட்டார் என்று கூறி, வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு சிற்பி.தியாகராஜனுக்கு சாதகமாக வந்தது. இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டிருந்த சுப்பிரமணி, தனது மகன் கார்த்திகேயன் மற்றும் சீனிவாசன் ஆகியோருடன் சிற்பக் கூடத்துக்குள் நுழைந்து, தியாகராஜனை அரிவாளால் வெட்டினார். அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே ஓடிவிட்டார் தியாகராஜன் . தலை,கைகளில் வெட்டுப்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் காரைக்குடி நகர காவல் நிலையத்தில், நடந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைபெற்றுவருகிறார். குற்றவாளிகள்மீது கொலை வழக்குப் பதிவுசெய்து காரைக்குடி போலீஸார் அவர்களைத் தேடிவருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!