வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (07/07/2018)

கடைசி தொடர்பு:19:08 (07/07/2018)

``எட்டு வழிச்சாலையால் தனியார் நிறுவனங்களுக்குப் பாதிப்பே இல்லையே...எப்படி?" சி.பி.எம் பாலபாரதி

"அந்தப் பகுதியில் மரவள்ளிக்கிழங்கை அரைக்கும் பெரிய கம்பெனி உட்பட பல தனியார் கம்பெனிகளுக்குச் சின்ன பாதிப்பும் இல்லாதபடி இந்தத் திட்டத்துக்கான பாதையை வடிவமைச்சிருக்காங்க. ஆச்சர்யமா இருக்குதில்லே?"

``எட்டு வழிச்சாலையால் தனியார் நிறுவனங்களுக்குப் பாதிப்பே இல்லையே...எப்படி?

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு மும்முரமாக உள்ளது. இதில் பாதிக்கப்படும் மக்கள் பல இடங்களிலும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் போராட்டமாகவும் மாறுகிறது. இந்தத் திட்டத்துக்கு எதிராகப் பேசுபவர்கள், களத்தில் செயல்படுபவர்கள் உள்ளிட்ட பலரையும் கைது செய்துவருகிறது தமிழக அரசு. கடந்த மாதம் சமூகச் செயற்பாட்டாளர் வளர்மதி கைது செய்யப்பட்டு, சமீபத்தில்தான் ஜாமினில் வெளியே வந்தார். தற்போது, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவருமான பாலபாரதி கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதுக்கான காரணம் குறித்து அவரிடம் பேசினோம். 

பாலபாரதி

``இந்த எட்டு வழிச்சாலைக்காக நிலத்தை இழந்து தவிக்கும் மக்களைச் சந்தித்து, கள நிலவரத்தைச் தெரிஞ்சுக்கிறதுக்காக, காலையில் பாப்பிரெட்டிபட்டி அருகில் இருக்கும் கிராமங்களுக்குப் போயிருந்தேன். போகும்போதே காவல் துறை தடுத்து, `இங்கெல்லாம் வரக் கூடாது'னு சொன்னாங்க. `இது என்ன தடை செய்யப்பட்ட பகுதியா? எங்க மக்களைச் சந்திக்கப் போறதுக்கு நீங்க என்ன தடை சொல்றது?'னு விவாதம் பண்ணினேன். மேலதிகாரியிடம் பேசிவிட்டு, 'சரி, போங்க'னு சொன்னாங்க. 

இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படுவதில் பெரும்பாலானோர் சிறு விவசாயிகளே. ஒருத்தர் நிலத்தில் எல்லைக் கல்லை நட்டு வெச்சிருக்காங்க. ஆனா, அதுக்கான தகவலையே அவங்கக்கிட்ட முறையாச் சொல்லலை. `கூட்டமா போலீஸ்காரங்களோடு வந்து கல்லை நடும்போது; நாங்க என்ன செய்யறது?'னு நிலத்துக்காரர் வேதனையோடு கேட்கறார். இதுதான் கள யதார்த்தம். அந்தப் பகுதியில் மரவள்ளிக்கிழங்கை அரைக்கும் பெரிய கம்பெனி உட்பட பல தனியார் கம்பெனிகளுக்குச் சின்ன பாதிப்பும் இல்லாதபடி இந்தத் திட்டத்துக்கான பாதையை வடிவமைச்சிருக்காங்க. ஆச்சர்யமா இருக்குதில்லே. சாலையும் ஜிக் ஸாக்காக வளைஞ்சு நெளிஞ்சு போற மாதிரி பிளான் போட்டிருக்காங்க. எதிர்த்துக் கேள்வி கேட்க பயப்படும் அப்பாவி மக்களின் நிலத்தைத்தான் அரசு கைப்பற்றுது. அதைக்கூட மக்களிடம் கருத்துக் கேட்டோ, நோட்டீஸ் அனுப்பியோ முறைப்படி செய்யலை. விவரம் தெரியாத மக்கள் என்னதான் செய்வாங்க? அதை மீறியும் அரசு அலுவலங்களில் மனு கொடுக்க போனால், உரியவர்கள் அவற்றை வாங்கறதே இல்லையாம். அங்கே இருக்கும் யாராச்சும் வாங்கிக்கிறாங்க. அதனால், அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பாங்கனு மக்களுக்கு நம்பிக்கையும் இல்லை'' எனக் கொதிப்புடன் தொடர்கிறார்.

செலம் சென்னை எட்டு வழிச்சாலை

``ஒரு கிணற்றைப் பார்த்தேன். தண்ணீர் நெறைஞ்சு கிடக்குது. அதையும் காலி பண்ணப் போறாங்க. விவசாயம் செய்யற நிலம், வீடு, வத்தாத கிணறு, மரம் என எல்லாத்துக்கும் குறுக்கேதான் எட்டு வழிச்சாலையைப் போடப்போறங்க. மக்கள் என்ன செய்யறதுன்னு புரியாமல் தவிக்கிறாங்க. `வண்டி நிறைய போலீஸ்காரங்க வந்து இறங்கறப்போ எங்களால் என்ன செய்யமுடியும்? எங்களுக்குக் காசு, பணம் வேணாம். குடியிருக்கும் வீட்டையும் வெள்ளாமைப் பார்க்கும் நெலத்தையும் விட்டால் போதும்னு சொல்றாங்க. என்ன ஆனாலும் விட்டுக்கொடுக்கப் போறதில்லைன்னு உறுதியாவும் நிற்கிறாங்க.

மக்களைச் சந்திக்கப் போகக் கூடாதுனு சொல்றது எந்த விதத்திலும் நியாயமில்லை. ரெண்டு கிராமங்களைத்தான் பார்த்தேன். போலீஸ்காரங்க கூட்டமாக வந்து சூழ்ந்துட்டாங்க. என்ன ஏதுன்னு கேட்டதுக்கு, `நீங்க இங்கே இருக்கக் கூடாது; கிளம்புங்க'னு சொன்னாங்க. நான் மறுத்ததும், கைது பண்ணிட்டாங்க. பொதுமக்களைப் போராடத் தூண்டினதா வழக்கு போடுவாங்க. நான் நீதிபதியைப் பார்த்துப் பேசணும்னுதான் இருக்கேன். நமக்கு இருக்கும் கடைசி வழி நீதிமன்றங்கள்தானே!" என்று ஆதங்கத்துடன் முடிக்கிறார் பாலபாரதி.


டிரெண்டிங் @ விகடன்