வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (07/07/2018)

கடைசி தொடர்பு:19:26 (07/07/2018)

புழல் சிறை கொலை... விசாரணை அறிக்கை பதற்றம்... நடுங்கும் சிறை அதிகாரிகள்!

நான் செல்லும் தகவல் கைதிகளுக்கு முன்னரே கிடைத்து செல்போன்கள் அனைத்தும் பதுக்கப்பட்டுவிட்டன. இந்தமுறை அப்படி நடக்காமல் தடுக்கவே ரகசியமாக ரெய்டுக்குச் சென்றேன். என்னையே குற்றவாளிக் கூண்டில் ஏற்ற நினைப்பது எந்த வகையில் நியாயம்? - ருக்மணி பிரியதர்ஷினி

புழல் சிறை கொலை... விசாரணை அறிக்கை பதற்றம்... நடுங்கும் சிறை அதிகாரிகள்!

சென்னைப் புழல் சிறை வளாகத்தில் பாக்ஸர் முரளி என்ற ரவுடி, ஜூன் 20-ம் தேதி சக கைதிகளால் கொலைசெய்யப்பட்டார். முரளியின் கொலை தொடர்பாக போலீஸார், சிலரைக் கைது செய்தனர். வேறுசிலரை புழல் சிறையிலிருந்து வேறு சிறைகளுக்கு மாற்றியுள்ளனர். இந்நிலையில், `உயர் பாதுகாப்புப் பகுதியாக விளங்கும் புழல் சிறையில் கொலை நடந்தது எப்படி?' என்ற காரணத்தைத் கண்டறியும் அடுத்தகட்ட நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர். இந்தக் கொலை குறித்த விசாரணை அறிக்கையை குறிப்பிட்ட நாள்களுக்குள் அளிக்குமாறு, புழல் சிறை எண் ஒன்றுக்குப் பொறுப்பான சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, பாக்ஸர் முரளி கொலை குறித்து இரண்டு வாரகாலம் விசாரணை நடத்திய ருக்மணி பிரியதர்ஷினி, அது குறித்த அறிக்கையை கடந்த 4-ம் தேதி, கூடுதல் டி.ஜி.பி.யிடம் ஒப்படைத்தார். அந்த அறிக்கையில், ``உயரதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் தண்டனைக் கைதிகளுக்கான `செல்'-லில், விசாரணைக் கைதிகளை சிறைத்துறை உயரதிகாரி இடமாற்றம் செய்ததே பாக்ஸர் முரளி கொலைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஸ்டேட்மென்ட் சிறைத்துறை வட்டாரத்தைக் கிடுகிடுக்க வைத்துள்ளது. விசாரணை அறிக்கை தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், அறிக்கையைச் சமர்ப்பித்த அன்றே சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி சிறைக்குள் திடீர் சோதனை நடத்தி, ஏராளமான செல்போன்களைக் கைப்பற்றியுள்ளார். அந்த செல்போன்களில் பதிவான அழைப்புகளின் அடிப்படையில், இடம்பெற்றுள்ள விவரங்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி தகவல் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறைக்கைதிகளின் செல்போன் உரையாடல் பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியை உயரதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனராம். 

புழல் சிறை 1

விசாரணையின் உள்விவகாரம் அறிந்தவர்கள், ``இப்படியோர் அறிக்கையை ருக்மணி கொடுப்பார் என்று உயரதிகாரிகள் யாருமே எதிர்பார்க்கவில்லை. `உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல், தகவலும் தெரிவிக்காமல் கைதிகளை இடமாற்றம் செய்ததாலேயே கொலை நடந்தது' என அறிக்கையில் கொடுத்திருக்கிறீர்கள், நல்ல விஷயம்தான். அதைப்பற்றிக் கண்டிப்பாகப் பரிசீலிக்கிறோம். நீங்கள் (ருக்மணி பிரியதர்ஷினி) மட்டும் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் சிறைக்குள் திடீர் ரெய்டு நடத்தியிருக்கிறீர்கள். செல்போன்களைக் கைப்பற்றியிருக்கிறீர்கள். கைப்பற்றிய செல்போன்களின் இன்-கமிங், அவுட்-கோயிங் அழைப்புகள் பற்றியெல்லாம் மேலிடத்திலிருந்து விவரம் கேட்டிருக்கிறீர்கள். இவை அனைத்தும் நீங்கள் ஜோடித்த நாடகம் என்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். கைப்பற்றப்பட்ட செல்போன்கள் கைதிகளின் செல்போன்களே அல்ல; அவை கைதிகளைப் பார்க்கவந்த உறவினர்களின் செல்போன்கள்தாம் என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. நாங்கள் ஏன் உங்கள்மீது துறைரீதியான விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கக் கூடாது? இதுகுறித்து உங்களின் விளக்கத்தை எங்களுக்கு உடனே அளியுங்கள்' என்று, விசாரணை அறிக்கை கொடுத்தவர் மீதே உயரதிகாரிகள் பாய்ந்துள்ளனர். சூப்பிரண்டும் விஷயத்தை அப்படியே விட்டு விடுவதாகத் தெரியவில்லை. `அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு ரெய்டு போன போதெல்லாம், செல்போன்கள் சிக்கவில்லை. நான் செல்லும் தகவல் கைதிகளுக்கு முன்னரே கிடைத்து செல்போன்கள் அனைத்தும் பதுக்கப்பட்டுவிட்டன. இந்தமுறை அப்படி நடக்காமல் தடுக்கவே ரகசியமாக ரெய்டுக்குச் சென்றேன். என்னையே குற்றவாளிக் கூண்டில் ஏற்ற நினைப்பது எந்த வகையில் நியாயம்? ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கு நெருக்கடி கொடுத்தால், மொத்த விவகாரத்தையும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி விடுவேன்' என்று ருக்மணி பிரியதர்ஷினி பதிலுக்குப் பதில் மோதிக் கொண்டிருக்கிறார்" என்றனர்.

பாக்ஸர் முரளிமுப்பதடி உயரத்துக்குமேல் மதில் சுவர் அமைந்துள்ள புழல் சிறையிலிருந்து கைதிகள் மட்டுமல்ல; அதிகாரிகள் பேசுவதுகூட வெளிஉலகத்துக்குக் கேட்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. எங்கு எது நடந்தாலும் அதை விவரமாக மேலிடத்துக்குத் தெரிவிக்க வேண்டிய ஐ.எஸ். பிரிவு புழல் சிறைக்கும் தனியாக இயங்கி வருகிறது. ஆனால், அந்தப் பிரிவின் உயரதிகாரியும், சிறைத்துறையின் உயரதிகாரியும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் எந்த விவகாரமும் சிறை காம்பவுண்டு சுவரைத் தாண்டி வெளியில் வருவதில்லை. இந்தத் தகவலை இன்னொரு பிரிவு ரகசியமாகச் சேகரித்து, `நோட்' போட்டு மேலிடத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறதாம். சென்னை மத்திய புழல்சிறை 221 ஏக்கர் பரப்பளவுடன் ஆசியாவிலேயே பெரிய சிறையாகக் கருதப்படுகிறது. அங்குள்ள கைதிகளுக்கு மூன்று சிறைப்பிரிவுகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. தண்டனைக் கைதிகளை அடைக்கக் கூடியது சிறை எண்- 1 ஆகும். விசாரணைக் கைதிகளை அடைக்கக் கூடியது சிறை எண் -2 ஆகும். இந்த இரண்டிலும் தலா 1,250 கைதிகளை மட்டும்தான் ஒரே நேரத்தில் அடைக்க முடியும். மூன்றாவதாகப் பெண்களுக்கான தனிச்சிறை அமைந்திருக்கிறது. தற்போது பாக்ஸர் முரளி கொலையைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள், சிறைத்துறை அதிகாரிகளை கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள். 


டிரெண்டிங் @ விகடன்