'மேக் இன் இந்தியா'வை அடுத்து 'ஸ்டடி இன் இந்தியா!' - அதிர்ச்சிப் பின்னணியை விவரிக்கும் கல்வியாளர்கள்

தேசியத் தேர்வு முகமைமூலம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . ' வருங்காலங்களில், பணம் கொடுத்தால்தான் கல்வி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கும் வகையில்  திட்டங்களை வகுக்கின்றனர்' எனக் கொந்தளிக்கின்றனர். 

நீட்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ' நீட், ஜே.இ.இ, சிமேட், யு.ஜி.சி நெட்,  உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை தேசியத் தேர்வுகள் முகமை ( National Testing Agency) எடுத்து நடத்தும்; இனி ஆண்டுக்கு இருமுறை நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் நடத்தப்படும், நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதத்திலும் ஜே.இ.இ தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும்' எனத் தெரிவித்திருந்தார்.

பேராசிரியர் சிவக்குமார் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புகுறித்து நம்மிடம் பேசிய அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சிவக்குமார், "அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. நீட், ஜே.இ.இ. தேர்வுகள் மட்டுமல்லாமல் கேட், ஐ.ஐ.எம் தேர்வுகள், கல்லூரிப் பேராசிரியர் தேர்வு உள்பட அனைத்துத் தேர்வுகளையும் என்.டி.ஏ-விடம் மத்திய அரசு ஒப்படைக்க உள்ளது. இதன்மூலம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், வெளிநாட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை வகுத்துவருகிறது. 'மேக் இன் இந்தியா' போன்று 'ஸ்டடி இன் இந்தியா' என்ற பிரசாரத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. உலக வர்த்தகக் கூட்டங்களின் பல பிரிவுகளில் கல்வி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெறுகின்றன. 

அந்தக் கூட்டங்களில், அரசு அதிகாரிகள் பங்கேற்று, கல்வி வணிகத்தில் பங்குபெறுவதுகுறித்து விவாதங்களை நடத்திவருகின்றனர். கல்வி வணிகமயமாகும், தேர்வுகளை ஏஜென்ஸி மூலம் நடத்துவதுதான் வசதியாக இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர வேண்டும் என்றால், நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும். இதுபோன்று இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என மத்திய அரசு கணக்குப் போடுகிறது. அதனால், வணிகத்தைச் சார்ந்து பல மாற்றங்களை வேகமாகக் கொண்டுவருகிறது. சமீபத்தில், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக உயர்கல்விக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்கள் கடன் பெறுவதற்காக, புதிய உயர்கல்வி நிதி அமைப்பு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் எல்லாம் எதிர்காலத்தில் உயர் கல்வி என்பது சாதாரண குழந்தைகளுக்கு எட்டக்கூடிய விஷயமாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். சி.பி.எஸ்.இ என்பது கல்வி சம்பந்தப்பட்ட அமைப்பு. என்.டி.ஏ என்பது கல்வி சம்பந்தப்படாத தேர்வு நடத்தும் அமைப்பு. நீட் தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தும்போதே ஆயிரம் குறைபாடுகள் இருக்கின்றன. இதில், தனியாகத் தேர்வு அமைப்பு ஒன்று தேர்வை நடத்துவது ஏற்புடையது அல்ல. கல்வி பெறுவது ஜனநாயக உரிமை என்பதை மாற்றி, இனி வருங்காலங்களில் பணம் கொடுத்தால்தான் கல்வி பெற முடியும் என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டம் தீட்டிவருகிறது. நீட் என்ற தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தினாலும் ஒருமுறை நடத்தினாலும் அடித்தட்டு மக்கள் மருத்துவக் கல்வியைப் பெறுவது கனவாகத்தான் இருக்க முடியும்'' என்றார் ஆதங்கத்துடன்.

நெடுஞ்செழியன்``மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் முக்கிய நோக்கம், பாடத்திட்டங்களை மேம்படுத்துவது. ஆனால், சி.பி.எஸ்.இ பல நுழைவுத் தேர்வுகளை எடுத்து நடத்துவதால், அதன் முக்கியமான செயல்பாடுகளில் இருத்து தவறுகிறது. ஜே.இ.இ தேர்வை சிறப்பாக நடத்துகிறது. ஆனால், நீட் தேர்வில் கோட்டை விட்டுவிடுகிறது. அதனால்தான், தேசியத் தேர்வு அமைப்பு என்பது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், என்.டி.ஏ அமைப்பு எவ்வாறு செயல்படும்; அதன் நடைமுறைகள் என்ன என்பதுகுறித்து முழுமையான தகவலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. நீட், ஜே.இ.இ தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால், இரண்டு முறை நடத்தப்படும் தேர்வுகளுக்கு மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்; மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என்ற முழுமையான தகவல்களை மத்திய அரசு வெளியிடாமல், இன்ஸ்டால்மென்ட்டில் தகவல்களை வெளியிட்டுவருகிறது. இதிலிருந்தே, முழுமையான திட்டங்களை மத்திய அரசு வகுக்கவில்லை என்பது தெளிவாகிறது'' என விவரிக்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!