`தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது!’ - நாடு தழுவிய ஸ்டிரைக்குக்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு

லாரி ஸ்டிரைக்

டீசல் விலை உயர்வு, டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 20-ம் தேதி  லாரி ஸ்டிரைக் நடைபெற உள்ளது. இதற்கு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைபெற உள்ள லாரி ஸ்டிரைக்கில் பங்கேற்பது குறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பாக நெல்லையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி, லாரி ஸ்டிரைக்கில் தங்களது அமைப்பு பங்கேற்கும் என அறிவித்தார். 

இதுதொடர்பாகப் பேசிய அவர்,’’டீசல் விலை உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றால் லாரி உரிமையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகிவருகிறார்கள். அதனால், இந்தக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அத்துடன், நாள்பட்ட சுங்கச் சாவடியை அகற்றுதல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்துகிறோம். இந்தக் கோரிக்கைகளுக்காக வரும் 20-ம் தேதி முதல் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பாக நாடு முழுவதும் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதில், மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் இணைந்து செயல்படும். மாநிலம் முழுவதும் லாரிகள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும். அதனால், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது. தேசிய அளவில் 70 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்.அரசு இதுவரை எங்களின் போராட்ட அறிவிப்புக்கு எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் முன்வரவில்லை . அதனால், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும். வரும் 22-ம் தேதி ஒருநாள் மட்டும் பொது மக்களும் தங்களின் சொந்த வாகனங்களை இயக்காமல் டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!