வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (07/07/2018)

கடைசி தொடர்பு:21:32 (07/07/2018)

உடைகிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்! - திருச்சியில் நாளை முக்கிய அறிவிப்பு?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்ட பக்கீர் முகமது அல்தாஃபி, தனது ஆதரவாளர்களுடன் புதிய அமைப்பை உருவாக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினர் தனியாகப் பிரிந்து, 2004-ம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் செல்வாக்கு மிக்க தலைவராக ஜெய்னுல் ஆபீதீன்  இருந்தார். தன்னை மீறி எதுவும்  நடக்காதவண்ணம் பார்த்துவந்தார். 

இந்நிலையில், சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட காலங்களில் இந்த அமைப்பினர் பொதுமக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்தனர். இதில், அந்த அமைப்பின் இளம் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி இளைஞர்களுடன் களத்தில் பணியாற்றினார். இவரது பேச்சு இஸ்லாமிய இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது, ஜெய்னுல் ஆபீதீனுக்கு உறுத்தலாக இருந்துள்ளது. இந்நிலையில், தன்னிடம் விளக்கம் கேட்க வந்த பெண்ணை, அல்தாபி வீட்டுக்கு வரச் சொல்லியதாகப் புகார் எழுந்தது. பொதுவாக, விளக்கம் கேட்க வரும் பெண்களைத் திரை மறைவில் அமர்த்திதான் பேசுவார்கள். இவ்விவகாரத்தை முன்வைத்து, அல்தாபிக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அல்தாபி, `நான் செய்தது தவறு என்றால், நானே ராஜினாமா செய்கிறேன்' எனக் கூறி அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார். அல்தாபியின் ராஜினாமாவுக்கு ஜெய்னுல் ஆபீதீன்தான் காரணம் என்ற பேச்சும் அடிபட்டது.

தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள், ஜெய்னுல் ஆபீதீனுக்குச் சாதகமாகச் சென்றுகொண்டிருந்த வேளையில், திடீரென அவருக்கு எதிராகப் புகார் கிளம்பியது. பெண் ஒருவருடன் ஆபாசமாகப் பேசியதாக, அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகளும் வெளியாகி, தவ்ஹீத்துகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையைச் சேர்ந்த ஒரு டீம்தான் இந்த ஆடியோக்களை வெளியிட்டது. இலங்கை டீம் வசம் மொத்தம் 46 ஆடியோ, வீடியோ ஃபைல்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. அதில் மூன்றை மட்டும்தான்  வெளியிட்டுள்ளனர் என மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு

இதையடுத்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெய்னுல் ஆபீதீன் நீக்கப்பட்டார். இந்நிலையில், தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து இதற்கு முன்பு நீக்கப்பட்ட முன்னாள் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி, தனது ஆதரவாளர்களுடன் திருச்சியில் நாளை ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் போன்று ஒரு புதிய அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.