`ஆள்வோரின் அத்துமீறல்!’ - முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்!

'ஜனநாயக வழியில் களம்கண்ட முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி கைதுசெய்யப்பட்டிருப்பது, ஆள்வோரின் அத்துமீறல்' என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 

பாலபாரதி கைது

சேலம் - சென்னை இடையே அமைய உள்ள எட்டு வழி பசுமைச்சாலை, தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இந்தத் திட்டத்துக்காக, தருமபுரி மாவட்டத்தில் 919.24 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்காக, தருமபுரி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் பூர்வீகக் குடியிருப்புகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி 70 முதல் 75 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை அளவீடு செய்து, கல் நட்டுவருகிறது.

இதனால், தருமபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் வீடுகள், விவசாய நிலங்கள், தென்னை மரங்கள், தேக்கு மரங்கள், ஏரி, குளங்கள் நீரோடைகள் எனப் பல்வேறு நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளை ஏ.பள்ளிப்பட்டி காவல்துறையினர் கைதுசெய்தனர்.

பாலபாரதி கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், ``எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்படுவோரின் நலன் காக்க ஜனநாயக வழியில் களம் கண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கைதுசெய்யப்பட்டிருப்பது, ஆள்வோரின் அத்துமீறலாகும். ஆம் ஆத்மி வசீகரனும் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் விடுதலைசெய்ய வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!