வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (08/07/2018)

கடைசி தொடர்பு:09:05 (08/07/2018)

திருப்பூர் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் இருவர் பலி!

திருப்பூர் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

சிறுவர்கள் பலி

திருப்பூர் மாவட்டம் வெல்லக்கரடு பகுதியில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றி வரும் கௌதமன் என்பவரின் மகன் திலீபன். இவரும், அதேபகுதியில் வசித்து வரும் லாரி ஓட்டுநர் நல்லதம்பி என்பவரின் 12 வயது மகன் பரத் ஆகியோரும் நேற்று திருப்பூர் மாணிக்காபுரம் பகுதியில் உள்ள குளத்துக்கு குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத அவ்விருவரும் எதிர்பாராத விதமாகத் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்றுவிட, தண்ணீர் இருவரையும் உள் இழுத்திருக்கிறது.

அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர்கள் சிலர் உடனடியாக தண்ணீருக்குள் குதித்து இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். இருப்பினும் இரண்டு சிறுவர்களும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்து போயினர். பின்னர் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், உயிரிழந்த சிறுவர்களது உடல்களைக் குளத்தில் இருந்து வெளியே எடுத்து வந்தனர். பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சிறுவர்களின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.