மாவாக அரைக்கப்படும் ரேசன் அரிசி - கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டியில் இருந்து லாரிகள் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த 137 ரேஷன் அரிசி மாவு மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அரவைமில் உரிமையாளர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் உரிமையாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் அரசி மாவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அரவை மில்களில்  ரேஷன் அரிசியை மாவாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி  டி.எஸ்.பி. ஜெபராஜ்  தலைமையிலான போலீஸார் குழு, விசாரணை நடத்தினர்.

கோவில்பட்டி - எட்டயபுரம் சாலை தொழிற்பேட்டையில் உள்ள அரவைமில்லில் போலீஸார் சோதனையிட்டதில், ரேஷன் அரிசி மாவாக அரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரவைப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வள்ளுவர்நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான மில் என்பதும், இதே போல செக்கடித் தெருவில் உள்ள கண்ணன் என்பவருக்குச் சொந்தமான தங்கம் மற்றும் ரத்தினம் என்ற அரவை மில்லிலும் இது போல அரவைப்பணி பல நாட்களாக நடைபெற்று வருவதும் தெரிய வந்தது.

இந்த அரவைமில்களில் ரேஷன் அரிசிகள் மாவாக  அரைக்கப்பட்டு, மூட்டைகளில் நிரப்பப்பட்டு, பழைய மேற்கு காவல் நிலையம் அருகில் உள்ள காளிராஜ் என்பவருக்குச் சொந்தமான பார்சல் சா்வீஸ் அலுவலகம் மூலம் மதுரைக்குக் கடத்தப்படுவது தெரியவந்தது. இதில் மதுரைக்குக் கடத்த இருந்த, கண்ணன் என்பவரது அரவை மில்லில் அரைக்கப்பட்ட 66 ரேஷன் அரிசி மாவு மூட்டைகள், மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான அரவை மில் மூலமாக அரைக்கப்பட்ட 71 மூட்டைகள் என மொத்தம் 137 அரிசி மாவு மூட்டைகளை போலீஸார், கைப்பற்றி உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும், போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அரவை மில் உரிமையாளர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் உரிமையாளர் ஆகியோரிடம் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!