இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்!

ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டை மற்றும் படகினை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் கைப்பற்றினர்.

கடல் அட்டை

அரிய வகை கடல்வாழ் உயிரினமான 'கடல் அட்டை' உள்ளிட்ட 52 வகையான கடல் வாழ் உயிரினங்களை மீனவர்கள் பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இவற்றைப் பிடிப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இந்த தடை கிடையாது. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் உள்ள சிலர் கள்ளத்தனமாகக் கடல் அட்டையினை பிடித்து வந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக கடல் அட்டை நாட்டுப்படகு ஒன்றில் மறைத்து வைத்திருப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீஸார்  நாட்டுப்படகு ஒன்றில் மூட்டை மூட்டையாகக் கடல் அட்டைகள் கட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தனர். உடனடியாக கடல் அட்டைகளையும், நாட்டுப்படகினையும்  பறிமுதல் செய்தனர். கடல் அட்டையினை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த நாட்டுப்படகின் உரிமையாளர்  குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸார், தப்பி ஓடிய கடத்தல் நபர்களையும் தேடி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!