மூதாட்டி சிறுநீரகத்தில் இருந்து அகற்றப்பட்ட 47 கற்கள் : அரசு மருத்துவர்கள் சாதனை

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவரது சிறுநீர்ப்பையிலிருந்த 47 கற்களை  மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி சாதனை செய்துள்ளனர்.

சிறுநீரக கற்களை அகற்றி சாதனை படைத்த ராமநாதபுரம் மருத்துவர்கள்

 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விளங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருளன் மனைவி உடையாள்(65). இவருக்குக் கடந்த 5 ஆண்டுகளாகச் சிறுநீர் பை வீங்கியிருந்ததால் சிறுநீர் முழுமையாக வெளியேறாத நிலையில் அவதியுற்று வந்தார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உடையாள் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது சிறுநீர்ப் பையில் கற்கள் அதிகமாக இருந்ததை ஸ்கேன் மூலம் கண்டறிந்தனர். இதனையடுத்து முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யபட்டது. மருத்துவர் அறிவழகன்,நிலைய மருத்துவ அலுவலர் ஞானக்குமார் ஆகியோர் உடையாளுக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சையின் போது சிறுநீர் பையிலிருந்து சிறிதும் பெரிதுமான 47 கற்களை அகற்றி சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள்.

மூதாட்டியின் சிறுநீரகத்தில் இருந்து அகற்றப்பட்ட கற்கள்

இது தொடர்பாக சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் க.அறிவழகன் கூறுகையில் ''உடையாளுக்கு நரம்புத் தளர்ச்சியுடன் இணைந்து சிறுநீர்ப்பையில் கற்களும் சேர்ந்து மிகுந்த அவதிப்பட்டு வந்தார். அவரை பரிசோதிக்கும் போது சிறுநீர்ப்பையில் 25 மி.மீட்டர் அளவில் 4 கற்கள் உட்பட மொத்தம் 47 கற்கள் இருப்பது தெரிய வந்தது. பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்து கற்கள் ஒவ்வொன்றையும் பொறுமையாக வெளியில் எடுத்தோம்.பொதுவாக முதியோர்கள் அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீர்ப்பையில் கற்கள் அதிகம் தங்காது. உணவில் உப்பு மிகுந்த பொருட்களான கருவாடு,அப்பளம்,வடகம்,ஊறுகாய் போன்றவற்றை முதியோர்கள் தவிர்த்து விடுவது நல்லது.முக்கியமாகப் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்கள் சிறுநீரை அடக்கி வைக்காமல் உடனக்குடன் வெளியேற்றி விட வேண்டும். அதிக தண்ணீரும் பருக வேண்டும். இதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்'' என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!