வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (08/07/2018)

கடைசி தொடர்பு:16:00 (08/07/2018)

சிலை கடத்தல் வழக்கில் 11 வருடங்களாகத் தேடப்பட்ட குற்றவாளி கைது!

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் திருடப்பட்ட வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்தனர்.

சிலை கடத்தல் குற்றவாளி

நெல்லை, குமரி மாவட்ட எல்லையான பழவூர் பகுதியில் பழமைவாய்ந்த நாறும்பூநாதர் கோயில் உள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் இருந்து 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருட்டுப் போயின. இதுதொடர்பாக சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 17 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். 
 
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நாறும்பூநாதர் கோயிலின் ஆடல் நடராஜர், சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் என 9 சிலைகள் மீட்கப்பட்டன. இந்த சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என்றும், இவற்றில் நடராஜர் சிலை மட்டும் 15 கோடி ரூபாய் மதிப்புள்ளது எனவும் போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நெல்லை மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த பரமதுரை என்பவரைக் கடந்த 11 ஆண்டுகளாக போலீஸார் தேடி வந்தனர். ஆனால், போலீஸ் பிடியில் சிக்காமல் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், பரமதுரை குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரமதுரையை கைது செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பரமதுரைக்கு நூற்றுக்கும் அதிகமான வழக்குளில் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அதனால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என சிலைக் கடத்தல் பிரிவு போலீஸார் நம்புவதால் அதற்கான சட்ட பூர்வ நடவடிக்கையைத் தொடங்க இருக்கிறார்கள்.